'ரோபோட்'டில் திரு!

முதல்வன் படத்திலிருந்து ஷங்கரின் பெரும்பாலான படங்களுக்கும் கேமராமேனாக பணியாற்றி வந்தவர் கே.வி. ஆனந்த்தான். சிவாஜி வரை அவர்தான் ஷங்கரின் கனவுக் கண்களாக பணியாற்றி வந்தார்.
இந் நிலையில் ரோபோட் படத்தில் ஆனந்த்தால் பணியாற்ற முடியவில்லை. காரணம், ஏவி.எம்மின் தயாரிப்பில் சூர்யா- தமன்னா நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தை ஆனந்த் இயக்கப் போகிறார். இதனால் ரோபோட்டில் அவரால் பணியாற்ற இயலவில்லை.
இதையடுத்து நீரவ் ஷாவை அணுகினார் ஷங்கர். அவரும் ஷங்கரின் அழைப்பை ஏற்றார். ஆனால், விஷ்ணுவர்த்தனின் சர்வம் படத்தில் பணியாற்ற அழைப்பு வந்ததால் ஷங்கர் அழைப்பை ஏற்க அவரால் இயலவில்லை.
இதையடுத்து திருவை புக் செய்து விட்டார் ஷங்கர். திரு, கமல்ஹாசனால் பட்டை தீட்டப்பட்டவர். ஹேராம் உள்ளிட்ட கமல்ஹாசனின் சில படங்களில் திரு பணியாற்றியுள்ளார். அஜீத்தின் கிரீடம் படத்திற்கும் திருதான் கேமராக் கண்ணாக இருந்தார்.
இப்போது சூப்பர் ஸ்டார் படத்தில் பணியாற்றவுள்ளதால் சூப்பர் கேமராமேன் அந்தஸ்தைப் பெறுகிறார் திரு.


Click it and Unblock the Notifications











