twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் கடவுள் ரிலீஸ் - மெய்மறந்த ரசிகர்கள்!!

    By Staff
    |

    Naan Kadavul
    'படம் எடுத்தா இப்படி படம் எடுக்கணுங்க...இல்லேன்னா பேசாம சும்மா இருக்கணும்...' - நான் கடவுள் பார்த்துவிட்டு வெளியில் வந்த இளைஞர்கள் சிலர் நமது நிருபரிடம் தெரிவித்த உணர்ச்சிப்பூர்வமான கமெண்ட்தான் தலைப்பில் நீங்கள் படித்தது.

    கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஒரு தவம் மாதிரி பாலா எடுத்த படம் நான் கடவுள். இன்று நான் கடவுள் படம் உலகெங்கும் ரிலீஸாகியுள்ளது.

    தமிழறிந்த உலகமே, தங்கள் பெரும் வேதனைக்கிடையிலும் பாலாவின் இந்த உணர்வுப்பூர்வமான ஆக்கத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது.

    இதை ஒரு திரைப்படம் என்று கூறி சின்ன வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது. அதையும் தாண்டி, இந்திய சினிமாவுக்குள்ளேயே உலக சினிமா அடங்கியிருக்கிறது என்ற உண்மையைச் சொல்லும் படம் இது என சிலிர்க்கிறார்கள் தமிழ் திரையுலகில் பாலாவுக்கு எதிர் முகாமிலிருப்பவர்களும்.

    இன்று உலகம் ஸ்லம்டாக் மில்லியனேர் பற்றிப் பேசுகிறது. அது ஒரு தற்காலிக புகழ்தான். பாலாவின் நான் கடவுள் இனி உலகைப் பேச வைக்கும். இந்தப் படத்தைப் பாருங்கள்... இசையின் அர்த்தம், ஒரு படத்துக்கு இசையின் பங்களிப்பு என்னவென்பது புரியும், என்கிறார் சத்யம் திரையரங்கில் நான் கடவுள் பார்த்துவிட்டு கலங்கிய விழிகளுடன் வெளியில் வந்த திரைப்படக் கல்லூரி மாணவர் கணேஷ்.

    'இனி நான் ஒரு சினிமா இயக்குநராவேன் என்ற தைரியம் வந்துவிட்டது சார், இந்தப் படத்தைப் பார்த்த பிறகு. நான் நினைக்கிற சினிமாவை எடுக்க முடியாதோ என தயங்கிக் கொண்டிருந்தேன்.

    அண்ணன் பாலா...ஆம்... இனி என்னைப் போன்றவர்களுக்கு அவர் உடன்பிறவாத அண்ணன்தான்...எடுத்துள்ள இந்த ஒரு படம் போதும். அவர் வழியில் நாங்களும் பயணிப்போம், என்கிறார் உணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல்.

    சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் பலர் கும்பலாக படம் பார்க்க வந்திருந்தனர். இவர்கள் இன்று முதல் பாலாவின் ரசிகர்களாகி விட்டதாய்த் தெரிவித்தனர்.

    எங்களைப் பொறுத்தவரை நடிகர்களில் ரஜினி சூப்பர் ஸ்டார் என்றால், இயக்குநர்களில் சூப்பர் ஸ்டார் பாலா சார்தான். இருவரும் வெவ்வேறு துருவங்கள்தான் என்றாலும் எங்களால் இருவரையுமே ரசிக்க முடிகிறது..., என்றனர்.

    பொதுவாக ஆட்டம் பாட்டம் குத்தாட்டம் என்பதுதான் இளைஞர்களுக்குப் பிடிக்கும் என்ற வட்டத்தை தகர்த்தெறிந்துள்ளது பாலாவின் நான் கடவுள்.

    இன்று இந்தப் படம் பார்த்தவர்களின் 90 சதவிகிதம் இளைஞர்கள், இளம் பெண்கள். திரையரங்கில் அப்படியொரு நிசப்தம். ஒரு சிறந்த பேராசிரியரின் உரையைக் கேட்க வந்திருக்கும் மாணவர்களைப் போல அத்தனை சிரத்தையாக ரசிகர்கள் பார்த்த படம் நமக்குத் தெரிந்து நான் கடவுளாகத்தான் இருக்கும்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X