விவகாரமாகும் கஜினி!

இந்தி கஜினியின் வசூல் விவரத்தை தாக்கல் செய்யுமாறு சென்னை கோர்ட் உத்தரவிட்டிருப்பதே இதற்கு முக்கிய காரணம்.
இந்தி கஜினி பட வசூல் விவரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அப்படத்தின் வினியோகஸ்தருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமீர்கான் நடித்து முருகதாஸ் இயக்கிய இந்தி கஜினி படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என கஜினி தமிழ் படத்தின் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ் வழக்கை நீதிபதி சிவக்குமார் விசாரித்து இடைக்கால தடை விதித்தார். இத்தடையை நீக்கக் கோரி கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் அப்பீல் செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் தனபாலன் மற்றும் சத்யநாராயணன் விசாரித்து சில நிபந்தனைகளுடன் படத்தை வெளியிட கடந்தவாரம் அனுமதி அளித்தனர்.
படம் வெளியிட ரூ. 5 கோடி முன்பணம் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இவ் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கீதா ஆர்ட்ஸ் சார்பாக மூத்த வக்கீல் ஸ்ரீராம்பஞ்சு, வக்கீல்கள் அன்புமணி, சிவராமன் ஆகியோர் ஆஜராகி, 'நீதிமன்ற உத்தரவு படி ரூ. 5 கோடியை, உயர்நீதிமன்ற பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்துள்ளோம். திரைப்படத்தின் வசூல் விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தியா முழுவதும் இந்த திரைப்படம் திரையிடப்பட்டிருப்பதால் வசூல் விவரங்கள் இன்னும் வந்து சேரவில்லை. எனவே ஒருவார கால அவகாசம் வேண்டும்' என்றனர்.
சேலம் சந்திரசேகர் சார்பாக, மூத்த வக்கீல் டி.வி.ராமானுஜம், வக்கீல் என்.எஸ்.கே.சிவராஜ் ஆகியோர் ஆஜராகி, படம் வெளியாகி 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே ஒரு வார வசூல் கணக்கை உடனடியாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இதில் கால அவகாசம் கொடுக்கக் கூடாது என்றனர்.
இதைக்கேட்ட நீதிபதிகள், கஜினி படத்தின் வசூல் கணக்கை இதுவரை தாக்கல் செய்யாதது ஏன்? கணக்கு தாக்கல் செய்ய எத்தனை நாட்கள் அவகாசம் வேண்டும் என்பதை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யுங்கள். அதே போல் வசூல் கணக்கை தாக்கல் செய்யாததற்கான காரணத்தையும் எழுத்து பூர்வமாக தெரிவியுங்கள் என உத்தரவு பிறப்பித்தனர்.
இதையடுத்து எழுத்துப்பூர்வமான மனு ஒன்றை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தாக்கல் செய்தது. அதில் 'படத்தின் வசூல் கணக்கு வரவில்லை. அதனால் அவகாசம் வேண்டும்' என்று கூறியிருந்தனர். இதை கேட்ட நீதிபதிகள், வரும் 27ம் தேதி வசூல் கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.


Click it and Unblock the Notifications











