பிரபாகரன் படச் சுருள்: பெரீஸிடம் தர ஜெமினி லேப் மறுப்பு

இலங்கையைச் சேர்ந்த இயக்குநர் துஷாரா பெரீஸ் பிரபாகரன் என்ற பெயரில் தமிழ் மற்றும் சிங்களத்தில் ஒரு படம் எடுத்துள்ளார். இதில் தமிழர்களையும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் அவர் இழிவாகசித்தரித்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் படத்தை பிரிண்ட் போடுவதற்காக நெகட்டிவுடன் சென்னைக்கு வந்தார். ஜெமினி பிலிம் லேபில் பிரிண்ட் போடும் பணி நடந்தது.
இதை அறிந்த திரையுலகினர், விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் அமைப்பினர் விைரந்து சென்று பிரிண்ட் போடும் பணியைத் தடுத்து நிறுத்தினர். பெரீஸுக்கும் அடி உதை விழுந்தது.
இப்படத்துக்குத் தடை கோரி சென்னை சிவில் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், பிரபாகரனுக்கு இடைக்காலத் தடை விதித்தது. விளக்கம் அளிக்குமாறு பெரீஸ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது.
படச்சுருளை பெற்றுத் தரக் கோரி இலங்கை அரசை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பெரீஸ் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு சென்னைக்கு கிளம்பி வந்தார்.
நேராக ஜெமினி லேப் சென்ற அவர் படச்சுருளை திரும்பத் தரும்படி கேட்டார். ஆனால் ஜெமினி லேப் நிர்வாகிகள் படச் சுருளை தர மறுத்து விட்டனர்.
மத்திய அரசிடம் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே படச்சுருள் திரும்பத் தரப்படும் என அவர்கள் பெரீஸிடம் திட்டவட்டமாக கூறி விட்டனர். படச்சுருளை தரலாம் என இந்திய அரசு எழுத்துபூர்வமாக அனுமதி அளித்தால் மட்டுமே படச்சுருளைத் தர முடியும் எனவும் பெரீஸிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிரபாகரன் படத்தின் சில காட்சிகள் யூ டியூப் இணையதளத்தில் நடமாடுவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











