இரும்பு கோட்டை .. இயக்குநர் மகேந்திரன் பாராட்டு

முள்ளும்மலரும், உதிரிப் பூக்கள், ஜானி என தமிழ் சினிமவில் புதுமைகள் படைத்தவர் மகேந்திரன். இளம் இயக்குநர்களின் புதிய முயற்சிகளை எப்போதும் பாராட்டத் தவறுவதில்லை.
சமீபத்தில் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியான இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படத்தைப் பார்த்துவிட்டு, ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம்:
“அன்புக்குரிய சிம்புதேவனுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். நகைச்சுவைப் படங்களை எடுப்பதில் உங்களுக்குள்ள வல்லமை மற்றும் தனித்தன்மையை மிக அழுத்தமாக நிரூபித்திருக்கிறீர்கள்.
இம்சை அரசன் 23-ம் புலிகேசி ஒரு புதிய களம் என்றால், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் இன்னொரு புதுமையான களம். அதிலும் ஒரு கௌபாய் கதையை தொடக்கம் முதல் முடிவு வரை ரசித்து, ருசித்து, சிரித்து சிரித்து மகிழும்படி படமாக்கியிருக்கிறீர்களே, அது அசுர சாதனை.
படம் முடியும் வரை ஒரு சிறுவனாகவே மாறி வாய்விட்டு ரசித்து சிரித்து மகிழ்ந்தேன் நான். அதே சமயம் என் வயதுக்கே உரிய கூர்மையோடு படத்தின் ஒவ்வொரு நுணுக்கத்தையும், படத்தின் சிறப்புக்காக உங்களைப் போலவே சிறப்பாய் உழைத்துள்ள உங்கள் டெக்னீஷியன்- நடிகர்களையும் அவர்களின் ஒருமித்த செயல்திறனையும் உணர்ந்து வியப்படைகிறேன். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனக்கு முழுமையான மன நிறைவையும் புதுமையான உலகில் சஞ்சரித்த அனுபவத்தையும் உங்களின் இந்த திரைப்படம் தந்த்து. நன்றி.
ஒரு நகைச்சுவைப் படத்தை இயக்குவது, அதன்பொருட்டு இதுவரை யாரும் அணுகாத களத்தைத் தேர்வு செய்வது மிக்க் கடினமான பணி. உங்களுக்கு அந்த வல்லமை உங்கள் நிழலாகவே உள்ளது," எனப் பாராட்டியுள்ளார் மகேந்திரன்.


Click it and Unblock the Notifications











