twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னைக்கு மாற்றம்: சிரஞ்சீவி Vs விஜயசாந்தி

    By Staff
    |

    Chiranjeevi and Vijay Shanthi
    ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டு, அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளதால், தெலுங்கு சினிமா நிறுவனங்கள் மற்றும் படப்பிடிப்புகளை சென்னைக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக சிரஞ்சீவி தெரிவித்தார். இதுகுறித்து அவர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடனும் பேச்சு நடத்தினார்.

    இந்த முடிவுக்கு தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி தலைவர்களில் ஒருவரான விஜய்சாந்தி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னை மீதுள்ள மோகம் குறையாததால் சிரஞ்சீவி இப்படிச் சொல்வதாகவும் அவர் சாடியுள்ளார்.

    தெலுங்கானா தனி மாநிலம் பிரிப்பதற்கு நடிகரும், பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் தலைவருமான சிரஞ்சீவி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஒன்றுபட்ட ஆந்திரா கோரி தனது எம்எல்ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

    தெலுங்கானா தொடர்பாக மத்திய அரசு நேற்று முன்தினம் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்திலும் அவர் பங்கேற்று எதிர்ப்பு தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை நேற்று நேரில் சந்தித்து தெலுங்கானா விவகாரம் குறித்துப் பேசினார்.

    அந்த சந்திப்பின்போது, தெலுங்கானா போராட்டம் காரணமாக ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கு நிலைமை சீர் குலைந்து இருப்பது குறித்து சுட்டிக் காட்டிய அவர், சினிமா படப்பிடிப்புகளை மட்டும் சென்னைக்கு மாற்றப் போவதாகவும் கூறினாராம்.

    நிருபர்களிடம் சிரஞ்சீவி கூறுகையில், தனி தெலுங்கானா தொடர்பாக நடைபெற்றுவரும் போராட்டங்களால் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களின் நடப்பு கல்வி ஆண்டு படிப்பு பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு சிதம்பரத்திடம் வலியுறுத்தினேன்.

    சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் மாணவர்கள் பாதிக்காமல் பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

    தற்போது நிலவும் பதற்றமான நிலைமையால் ஆந்திராவில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருப்பது குறித்தும் அவரிடம் பிரச்சினையை எழுப்பினோம். ஹைதராபாத் நகரில் சினிமா பட தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் படப்பிடிப்பு நிலையங்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்பட்டுள்ளதால் ஆந்திராவை விட்டு வெளியேறி சென்னையில் பட தயாரிப்பு நிறுவனங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    சென்னை மீது சிரஞ்சீவிக்கு மோகம்-விஜய்சாந்தி:

    சிரஞ்சீவியின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நடிகையும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர்களில் ஒருவருமான விஜய்சாந்தி.

    சிரஞ்சீவி பேட்டி வெளியான கையோடு நிருபர்களைச் சந்தித்த விஜயசாந்தி கூறுகையில், சிரஞ்சீவி தெலுங்கு சினிமா படப்பிடிப்பு முழுவதையும் தமிழக தலைநகர் சென்னையில் நடத்துவோம் என்று கூறி இருக்கிறார். அவருக்கு சென்னை மீதுள்ள மோகம் கொஞ்சம் கூட குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.

    அவர் உண்மையான ஆந்திர விசுவாசியாக இருந்தால் தெலுங்கு படப்பிடிப்பை விஜயவாடா அல்லது விசாகப்பட்டினத்தில் நடத்துவோம் என்று கூறி இருக்கலாம். அதை விட்டு விட்டு சென்னைக்கு மாற்றுவோம் என்று சொல்வது நியாயமா?

    சென்னை தமிழ் நாட்டில் இருக்கிறது என்பதை அவர் மறந்துவிட்டுப் பேசுகிறாரா? இப்படி ஆந்திராவுக்கு பச்சைத் துரோகம் செய்யும் சிரஞ்சீவியை ஆந்திர மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

    தெலுங்கானா தனி மாநில விவகாரத்தில் காங்கிரஸ் தெலுங்கு தேசம் கட்சிகள் இரட்டை வேடம் போடு கின்றன. தெலுங்கானாவை ஆதரித்தால் ராயலசீமா கடலோர ஆந்திராவில் ஓட்டு வாங்க முடியாது என்று அஞ்சுகின்றனர். இதனால்தான் என்ன முடிவு எடுப்பது என்று குழம்பிப்போய் உள்ளனர் என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X