For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தெலுங்கு தேசத்திலிருந்து ரோஜா விலகல்-நாயுடு மீது கடும் பாய்ச்சல்

  By Staff
  |
  Roja
  தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணி தலைவி பதவியை நேற்று ராஜினாமா செய்தார் நடிகை ரோஜா.

  ராஜினாமா செய்த கையோடு, தெலுங்கு தேசம் கட்சி மற்றும் தேர்தலில் தன்னைத் தோற்கடிக்க உள்வேலை பார்த்த நிர்வாகிகள் பற்றி காரசாரமாக பேட்டியளித்தார்.

  தெலுங்கு தேசம் கட்சியில் மாநில மகளிர் அணி தலைவி அக் சார்பில் கடந்த 2004-ம் ஆண்டு நகரி சட்டமன்ற தொகுதியிலும், 2009-ம் ஆண்டு சந்திரகிரி சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

  இந்தத் தோல்விகளுக்கு சொந்தக் கட்சியினர் சிலரே காரணமாக இருந்ததாகவும் அவர் கூறிவந்தார்.

  இதனால் தெலுங்கு தேசத்திலிருந்து விலகி காங்கிரஸில் சேரும் திட்டத்திலிருந்தார். அதற்காக மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியைச் சந்தித்துப் பேசினார். கடந்த செப்டம்பர் 2-ம் தேதி அவர் காங்கிரஸில் இணைவதாக இருந்தது. ஆனால் அன்றுதான் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்தார்.

  இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து முறைப்படி விலகுவதாக நேற்று அறிவித்தார் ரோஜா.

  தனது ராஜினாமா குறித்து ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் அளித்த பேட்டி:

  கடந்த இரண்டு முறையும் நான் தேர்தலில் தோற்கக் காரணம் தெலுங்கு தேசம் கட்சியின் சில நிர்வாகிகளே எனக்கு எதிராக உள்வேலை பார்த்ததுதான்.

  தெலுங்கு தேசம் கட்சியினர் என்னை வளரவிட மாட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டதால்தான் இப்போது ராஜினாமா செய்கிறேன்.

  தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த மாவட்டம் சித்தூர். மிகவும் பின் தங்கிய மாவட்டமும் கூட. ஆனால் அவர் முதல்வராக இருந்தபோது இந்த மாவட்டத்துக்காக எதுவும் செய்யவில்லை. இந்த மாவட்டத்தின் முன்னேற்றத்தில் எந்த அக்கறையும் காட்ட வில்லை.

  சந்திரகிரி செல்லம்மா...

  ஆனால் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி இந்த மாவட்டத்துக்காக பல வளர்ச்சி திட்டங்களை அமல் படுத்த தயாராக இருந்தார். இந்த மாவட்டத்தில் காளஹஸ்தி அருகில், மண்ணவரம் என்ற இடத்தில் 'பெல்' நிறுவனத்தின் மின்சாதன கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை 370 ஏக்கரில் அமைக்க அடிக்கல் நாட்ட திட்டமிட்டு இருந்தார். இந்த தொழிற்சாலைக்கு கடந்த 6-ந் தேதி பிரதமர் மன்மோகன்சிங் அடிக்கல் நாட்டுவதாக இருந்தது. அவரது வருகை 15-ந் தேதிக்கு தள்ளிப்போனதால் அந்த விழா ஒத்தி வைக்கப்பட்டது.

  நானும் அந்த விழாவில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியில் என்னை இணைத்துக் கொள்ள இருந்தேன். அதற்காகத்தான் ராஜசேகர ரெட்டியை அவரது இல்லத்தில் சந்தித்தேன். அப்போது என்னை, "வாங்க சந்திரகிரி செல்லம்மாள் (சந்திரகிரி தங்கை) என்று அன்போடும், மரியாதையோடும் அழைத்துப் பேசினார் ராஜசேகர ரெட்டி.

  பொற்காலம்... ரெட்டியின் காலம்!

  அவரை நான் பலமுறை தரம் தாழ்ந்து கூட விமர்சனம் செய்து இருக்கிறேன். அதையெல்லாம் பெரிது படுத்தாமல் என்னை மரியாதையோடும், கண்ணியத்தோடும் நடத்தினார். அப்படிப்பட்ட நல்ல மனிதரோடு இணைந்து பணியாற்ற முடியாமல் போய்விட்டதே என்று நினைக்கும்போது கண்ணீர் வருகிறது.

  ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக்காலம்தான் ஆந்திராவின் பொற்காலம். அவர் ஒருவர்தான் பெண்களுக்கு முக்கியத்துவம் தந்தார். ஏழைகளின், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார்.

  இனியும் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தால் மக்களுக்கு, என்னை நம்பி இருக்கும் தொண்டர்களுக்கு எதுவும் செய்ய முடியாது. எனவே ஒரு பொம்மையாக அங்கே இருப்பதை விட, வேறு நல்ல விதத்தில் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு நல்லது செய்வேன். எனவேதான் மகளிர் அணி தலைவி மற்றும் சாதாரண தொண்டர் பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளேன்.

  அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன்... அதே நேரம் சினிமாவிலும் அதிக கவனம் செலுத்தப் போகிறேன்...", என்றார்.

  விரைவில் அவர் காங்கிரசில் இணைவார் என்று தெரிகிறது.

  காங்கிரஸ் மகளிர் அணி எதிர்ப்பு:

  இந் நிலையில் ரோஜா காங்கிரஸில் இணைய ஆந்திர மாநில காங்கிரஸ் மகளிர் அணித் தலைவி கங்கா பவானி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

  அவர் கூறுகையில், நடிகை ரோஜா ராசி இல்லாதவர். அவர் காலடி எடுத்து வைத்த இடம் மயானமாகிவிடும். அவர் இருக்கும் இடம் உருப்படாது.

  அவர் 2 முறை தேர்தலில் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கெனவே ஆந்திராவில் செல்வாக்கு உள்ளது. ரோஜா எங்கள் கட்சியில் சேருவதால் கூடுதல் பலம் வந்து விடப்போவதில்லை.ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக வேண்டும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.

  பிரஜா ராஜ்யமும் எதிர்ப்பு..

  ரோஜா காங்கிரசில் சேருவதற்கு சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியின் மகளிர் அணி தலைவி ஷோபா ராணியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

  அவர் கூறுகையில், ரோஜா எங்கு அடியெடுத்து வைக்கிறாரோ அந்த கட்சி கடுமையான பின்விளைவுகளை சந்திக்கும். நடிகையாக இருந்த அவர் முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் சேரப்போவதாக அறிவித்தார். அப்போது கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மீது நக்சலைட்டுகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தினார்கள். இதில் அவர் படுகாயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

  அவர் தெலுங்கு தேசத்தில் சேர்ந்த பிறகு அந்த கட்சி பின்னடைவையே சந்தித்தது. இந்தநிலையில் ரோஜா காங்கிரஸ் கட்சியில் சேர முயற்சிகளை மேற்கொண்டார். அப்போது ராஜசேகர ரெட்டி விபத்தில் சிக்கி மரணம் அடைந்துவிட்டார். எனவே ரோஜாவை காங்கிரசில் சேர்க்க வேண்டாம் என்று ஜெகன் மோகன் ரெட்டிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

  எந்த காலத்திலும் ரோஜாவை பிரஜாராஜ்யம் கட்சியின் பக்கமே சேர்க்க மாட்டோம் என்றார்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X