ஹீரோ ஆகிறார் கருணாஸ்!

தமிழ் சினிமாவில் இப்போது யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகலாம். பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் கலக்கிக் கொண்டிருந்த காலத்தில், காமெடியினாக தனி வழியில் கலக்கிக் கொண்டிருந்த கவுண்டமணி ஹீரோவாக நடித்தபோது பலரும் வியப்பில் விழி உயர்த்தினர். துரதிர்ஷ்டமோ என்னவோ, ஹீரோவாக கவுண்டமணி சாதிக்க முடியவில்லை.
அதேபோல வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி மூலமாக ஹீரோ அவதாரம் எடுத்தார். அப்படமும் பெரும் வெற்றிபெற்றது. ஆனால் மீண்டும் ஹீரோவாக நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன், கந்தரகோலமானதால், வடிவேலுவும் பேக் டூ காமெடி.
விேவக், சொல்லி அடிப்பேன் மூலம் ஹீரோ ஆனார். ஆனால் அந்தப் படம் வருமா, வராதா என்று யாராலும் ஊகிக்கக்கூட முடியவில்லை. எனவே விவேக் ஹீரோவாக சாதிப்பாரா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
சமீபத்தில் கஞ்சா கருப்பும், ஹீரோ ஆனார். இந்த நிலையில் புதிதாக கருணாஸும் ஹீரோ ஆகிறார்.
மலையாளத்தில் வெற்றி பெற்ற வடக்கு நோக்கி யந்திரம் படத்தின் ரீமேக்கில்தான் கருணாஸ் நாயகனாக நடிக்கவுள்ளார். மலையாளத்தில் சீனிவாசன் நடித்திருந்த கேரக்டரில்தான் கருணாஸ் நடிக்கிறார்.
இதுகுறித்து கருணாஸ் கூறுகையில், இந்தப் படத்தின் கேரக்டர் எனக்குப் பொருத்தமாக இருக்கும், பொருந்தும் என்பதால்தான் இப்படத்தில் நடிக்க முடிவு செய்தேன். எனது திறமை எனக்குத் தெரியும். எந்தளவுக்கு நடித்தால் ரசிகர்கள் ஏற்பார்கள் என்பதையும் அறிவேன்.
இப்படத்தில் நான் ஹீரோவாக நடித்தாலும், தொடர்ந்து காமெடியனாக ரசிகர்களை உற்சாகப்படுத்துவேன் என்றார் கருணாஸ்.


Click it and Unblock the Notifications











