நடிகர், நடிகையர்களுக்கு நல வாரியம்- முதல்வரிடம் கோரிக்கை
நடிகர் நடிகைகளுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி உள்ளிட்ட பிரதிநிதிகள் முதல்வர் கருணாநிதியிடம் வற்புறுத்தினர்.
நடிகைகள் பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட நாளிதழின் ஆசிரியர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த சங்கத்தின் பிரதிநிகள் இன்று பிற்பகல் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் நன்றி தெரிவித்துப் பேசினர்.
பின்னர் வெளியில் வந்த நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் ராதாரவி நிருபர்களிடம் பேசியதாவது:
எங்கள் வேதனையை உணர்ந்து உடனே நடவடிக்கை எடுத்துள்ளார் முதல்வர். அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தோம்.
இன்று வேறொரு கோரிக்கையையும் வைத்தோம். நடிகர் நடிகைகளுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்பதே அது. இந்த வாரியம் மூலம் அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கும். நல உதவிகள், சட்ட உதவிகள், காப்பீடு, உதவித் தொகை என அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.
எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வர் கூறியுள்ளார். நம்பிக்கையுடன் உள்ளோம் என்றார்.


Click it and Unblock the Notifications











