twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் 'ராஜா'ங்கம்!!

    By Staff
    |

    Ilayaraja
    திரை இசைத் துறையில் அது ஒரு வசந்த காலம்.... எங்கும் நிறைந்த இறைவன் மாதிரி, திரும்பிய பக்கமெல்லாம் காதுகளில் தேவ கானம்... அத்தனை பெருமைக்கும் சொந்தக்காரர் பண்ணைப்புரத்து ராஜா, நம் இசைஞானி இளையராஜா.

    ஒரே ஆண்டில் 51 படங்களுக்கு இசையமைத்து இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர். ஆறே ஆண்டுகளில் 300 படங்களுக்கு இசையமைத்த பெரும் சாதனைக்குச் சொந்தக்காரர்.

    தொன்னூறுகளின் இறுதியில் குத்து, கானா, தங்கிலீஷ், தறிகெட்ட வேக இசை என வெகுவாக மாறிவிட்ட தமிழ்த் திரை இசையிலிருந்து சற்றே ஒதுங்கி, ஆனாலும் தொடர்ந்து தன் பாணியிலேயே இசையை வழங்கி வந்தார் ராஜா. எவ்வளவோ பெரிய வாய்ப்புகள் தன்னைத் தேடி வந்த போதும், தனக்குப் பிடித்த சில படங்களை மட்டுமே ஒப்புக் கொண்டு பணியாற்றினார்.

    சூப்பர்ஸ்டார் ரஜினியின் படங்களையே மறுத்து ஒதுக்கிய ஒரே இசையமைப்பாளர் தமிழ் சினிமா வரலாற்றில் இளையராஜா ஒருவராகத்தான் இருக்கும்.

    இடையில் அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா புயலாய் புறப்பட்டு இசைத் துறையில் இன்று நெம்பர் ஒன் இடத்தில் நிற்கிறார்.

    மக்களின் இசை ரசனை நிச்சயம் மெலடியை நாடும் காலம் வரட்டும் என்று காத்திருந்தாரோ... என்னமோ...

    இதோ அப்படியொரு காலம் வந்தேவிட்டது.

    ராஜாவின் இசையில் இப்போது வெளிவந்துள்ள கலைஞரின் உளியின் ஓசை திரைப்படம், ராஜாவின் அருமையான மெலடிப் பாடல்களுக்காகவும், மனதை மயக்கும் பின்னணி இசைக்காகவும் மட்டுமே ரசிகர்களால் திரும்பத் திரும்பப் பார்க்கப்பட்டு வருகிறது.

    இந்தப் பத்தாண்டுகளில் முதல்முறையாக பின்னணி இசைக்காக அரங்கில் கைத் தட்டல் எழும் அதிசயத்தை இப்போதுதான் பார்க்கிறேன் என்கிறார் மாயாஜால் மேலாளர். ஐடி இளைஞர்கள் சங்கமிக்கும், பத்துத் திரைகள் கொண்ட மிகப்பெரிய மல்டிப்ளெக்ஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டு இளையராஜாவின் இசையில் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்கள் வரவிருக்கின்றன. அதில் ஒன்று பாலவின் நான் கடவுள். பால-ராஜா காமபினேஷன் என்னென்ன அற்புதங்களை நிகழ்த்தும் என்பதை சேதுவிலும் பிதாமகனிலும் பார்த்திருப்பீர்களே...

    அடுத்த இசைப் படைப்பு பிரகாஷ்ராஜின் மயிலு. படம் வெளிவரும் முன்பே இப்படத்தின் 5 பாடல்களும் மிகப் பெரிய ஹிட் என சொல்ல வைத்துவிட்டன.

    இவற்றைத் தவிர இன்னும் 16 படங்களுக்கு (தமிழில் மட்டும்) இசையமைத்து வருகிறார் ராஜா. கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என பிறமொழிகளில் 10க்கும் மேற்பட்ட படங்களை ஒப்புக் கொண்டுள்ளார்.

    ரசிகர்களும் மீண்டும் அந்த இசை அற்புதத்தை ரசிக்கத் தயாராகிறார்கள்...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X