twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஈரமில்லா நிலம்… ஈரமில்லா நெஞ்சம்… இரண்டாலும் பிரயோஜனமில்லை - ரஜினி

    By Staff
    |

    Rajini releases the audio of Eeram
    ஈரமில்லா நிலம்.. ஈரமில்லா மனசு இவை இரண்டாலும் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை என்று கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

    இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஈரம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று காலை நடந்தது.

    சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினார். தமன் இசையில் உருவான பாடல்களை ரஜினி வெளியிட, முதல் சிடியை இயக்குநர் - நடிகர் சசிகுமார் பெற்றுக் கொண்டார்.

    சிடியை வெளியிட்ட பிறகு ரஜினி பேசியதாவது:

    ரொம்ப நாள் கழிச்சி இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருக்கேன். திரையுலகைச் சேர்ந்த நிறைய பேர் வந்திருக்கீங்க. பொதுவா என்னால திரையுலக நிகழ்ச்சிகளில் நிறைய கலந்துக்க முடியல.

    இப்ப எந்திரன் ஷூட்டிங் தொடர்ந்து போயிட்டிருக்கு. அதனால் எந்த பங்ஷனுக்கும் போக முடியல. யாரும் தப்பா நினைச்சிக்காதீங்க.

    ஷங்கர் வந்து எங்கிட்ட இந்த பங்ஷன் பத்திச் சொன்னார். நான் வரணும்னு கேட்டார். சின்ன யோசனைகூட செய்யல… உடனே ஒத்துக்கிட்டேன்.

    வீட்டுக்கு வந்த பிறகுதான் யோசிச்சேன்… எப்படி உடனே ஒப்புக்கிட்டேன்னு. காரணம் அவர் மீதுள்ள ஈர்ப்பு.

    நண்பர் ஷங்கர் மிக நல்ல மனிதர். கடினமான உழைப்பாளி. நல்ல சிந்தனையாளர், நல்ல தேடல் உள்ள மனிதர் எனக்கு நண்பராகக் கிடைச்சிருக்கார்.

    என் நண்பர் ரவி ராஜாபினிஷெட்டி (பெத்தராயுடு இயக்குநர்) குறிப்பிட்டதுபோல, முன்பு பெத்தராயுடு வெற்றி விழா மேடையில் அவருடன் இருந்தேன். இன்று ஈரம் படத்தோட வெற்றிக்கு முந்திய விழாவில இருக்கேன். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்.

    இந்த வெற்றி பத்தி ஷங்கருக்கு நல்லா தெரியும். ஒவ்வொரு படத்தைத் தயாரிக்கும் போதும் அது பத்தி சரியாகவே கணிப்பார்.

    புலிகேசி, வெயில் படங்களைத் தயாரிச்சப்பல்லாம் அப்படித்தான் இந்தப் படம் நல்லா போகும் சார் என்பார்.

    கல்லூரி படம் எடுத்தப்ப, இந்தப் படம் நல்லா போகணும்னு ஆசைப்படறேன் என்றார்.

    இந்த ஈரம் படம் நிச்சயம் பெரிய வெற்றிப் படமா அமையும். இந்தப் படம் நல்லா இருக்கும், அது நல்லாவே தெரியுது.

    எந்திரன் படத்துக்காக அவரது உழைப்பு அபாரமானது. இந்த நேரத்தில் ரசிகர்களுக்கு சந்தோஷமான ஒரு விஷயம் சொல்லிக்கிறேன்…

    எந்திரன் படத்தோட 85 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் இந்தப் படப்பிடிப்பை நடத்தி முடித்தார் ஷங்கர். எங்களது உழைப்பை இங்கே குறிப்பிட்டு சாக்ஸ் (ஹன்ஸ்ராஜ் சக்சேனா) பேசியது மகிழ்ச்சியாக உள்ளது.

    எனக்குப் பிடித்த எம்ஆர் ராதா!

    நடிக வேள் எம்ஆர் ராதா எனக்கு மிகப் பிடித்த, நான் மதிக்கிற நடிகர். பல ஆண்டுகளுக்கு முன், விஜிபி கடற்கரைப் பூங்கா திறப்பு விழாவுக்கு அவரை அழைத்திருந்தார்கள். விஜிபி சகோதரர்கள் விஜி பன்னீர்தாஸ் மற்றும் சந்தோஷம் பற்றி அந்த விழாவில் பேசியவர்கள் மிகவும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். எல்லாரும் அவர்களது உழைப்பைப் புகழ்ந்துவிட்டுச் சென்றனர்.

    அடுத்து எம் ஆர் ராதா பேச வந்தார் -

    'என்னய்யா எல்லோரும் அவங்க உழைப்பைப் பத்தியே பேசுறீங்க… நாம உழைக்கலியா… எதுக்குய்யா இப்படி ஜால்ரா அடிக்கறீங்க. நாமளும்தான் உழைக்கிறோம். என்ன… நாம மாடு மாதிரி உழைக்கிறோம். அவங்க மனுஷன் மாதிரி உழைக்கிறாங்க.

    நாம அறியாமையோட உழைக்கிறோம்… அவங்க அறிவுப்பூர்வமா உழைக்கிறாங்க. நாம காட்டுப் பக்கமா 100 ஏக்கர் வாங்கிப் போடுவோம். அவங்க கடல் பக்கமா 100 ஏக்கர் வாங்கிப் போட்டு உழைக்கிறாங்க" என்றார்.

    ஆக, உழைக்கணும்.. ஆனா புத்திசாலித்தனமா உழைக்கணும்.

    இந்தப் படத்துக்கு ஈரம்னு டைட்டில் வைச்சிருக்காங்க. மனுசனுக்கு ஈரம் ரொம்ப முக்கியம். ஈரமில்லாத மனசும், ஈரமில்லா நிலமும் யாருக்கும் பிரயோஜனமில்லை…", என்றார் ரஜினி.

    மனிதருள் மாணிக்கம்!

    விழாவில் பேசிய ராம நாராயணன், ரஜினி கலைஞர்களில் சிறந்த நடிகராகவும், நடிகர்களில் நல்ல மனிதராகவும், மனிதருள் மாணிக்கமாகவும் திகழ்பவர். அதை அவருடன் பழகிய பிறகுதான் பலர் புரிந்து கொண்டனர், என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X