'முதலமைச்சர் திருமாவளவன்'

'மின்சாரம்' படத்தில், முதல்வராக நடித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்.
கோவை பிலிம் சிட்டி என்ற பட நிறுவனம் சார்பில் தமிழரசன் தயாரித்து, செல்வகுமார் டைரக்டு செய்துள்ள இந்தப் படத்தில், திருமாவளவன் ஒரு பாடலையும் எழுதியுள்ளார்.
இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்தது. பாடல்களை திருமாவளவன் வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் பெற்றுக்கொண்டார்.
விழாவில், திருமா பேசியதாவது:
நான் திரையுலகில் நுழைய காரணமாக அமைந்தது அன்புத் தோழி திரைப்படம். அதில் நான் நடித்தது, ஒரு விபத்து. எனக்கு திரைப்பட துறையிலே அரிதாரம் பூச வேண்டும் என்ற ஈடுபாடும், ஈர்ப்பும் இல்லை. மேலும் நிஜத்திலும் சரி, திரையிலும் சரி எனக்கு நடிக்கத் தெரியாது.
அதனால்தான் அரசியலிலே என் உழைப்புக்கு தகுந்த வளர்ச்சியைப் பெறவில்லை. அதுபற்றி நான் கவலைப்படவும் இல்லை.
திரைப்பட துறையிலே பொருளீட்ட வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. இந்தப் படத்தில் முதல்வர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை தயாரிப்பாளரும், இயக்குனரும் அணுகியபோது, நான் மறுத்தேன். திருமாவளவனுக்கு முதல்வர் ஆகவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது என்று பரிகசிப்பார்கள் என்றே கூறினேன்.
"உங்கள் நன்மதிப்பு பாதிக்காத அளவுக்கு அந்த வேடம் அமைந்திருக்கிறது" என்றும், அது ஒரு கருத்துள்ள வேடம் என்றும் சொன்னதாலும், நான் ஒப்புக்கொண்டேன்.
ஓட்டுப் போடுவதற்கு மட்டுமே நாங்கள் பிறக்கவில்லை. 4 படங்கள் ஓடினால், அதில் நடித்தவர் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். தெளிவே இல்லாதவர்கள் எல்லாம் நாட்டை ஆளவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர் ஏன் ஆளக்கூடாது?" என்றார் திருமா.
இனவெறிக்கு துணை-தேர்தல் முடிவுகளை பாதிக்கும்:
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முல்லை தீவில் பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியிலும் சிங்கள இனவெறி படை நச்சுபுகை குண்டுகளை வீசி பொதுமக்களை கொத்து கொத்தாக படுகொலை செய்து வருகிறது. இரண்டாம் உலக போரின்போது கூட செய்வதற்கு அஞ்சிய கொடூரத்தை சிங்கள இனவெறியன் ராஜபக்சே செய்து, ஈவிரக்கமின்றி ஈழத் தமிழினத்தை அழித்து வருகிறான்.
இந் நிலையிலும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் அமைதி காத்து வேடிக்கை பார்ப்பது நெஞ்சை பதற வைக்கும் கொடுமையாக இருக்கிறது.
அண்மையில் பாதுகாப்பு வளையம் பகுதியில் நச்சுப்புகை குண்டுகளை வீசியதில் 400க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும், புலிகள் சரணடையாவிட்டால் முல்லைத்தீவில் சிக்கி தவிக்கும் ஒட்டு மொத்த தமிழர்களையும் நச்சுபுகை குண்டுகளை வீசி அழித்தொழிக்க போவதாக ராஜபக்சே கொக்கரித்துள்ளான்.
இதன் பின்னணியில் இந்திய அரசின் கைகளும் உள்ளன என்று சர்வதேச அளவில் பேசப்படுகிறது.
கொலை வெறி பிடித்த ராஜபக்சேவின் பயங்கரவாத போக்கிற்கு துணை நின்றால் இந்திய அரசு நீங்காத வரலாற்று பழியை சுமக்க நேரிடும். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பாராளுமன்ற பொது தேர்தல் நடைபெறும் நிலையில் இந்திய அரசு, சிங்கள இனவெறிகளுக்கு துணை நின்றாலும் அல்லது கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருந்தாலும் மிகப்பெரும் அளவில் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications