ரஜினிக்கு விஜய் டிவி விருது

விஜய் டிவி கடந்த ஆண்டு முதல் திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது. இதற்காக ரசிகன் எக்ஸ்பிரஸ் என்ற வாகனத்தை தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு அனுப்பி ரசிகர்கள் மூலம் விருப்ப நடிகர், விருப்ப நடிகை, விருப்ப இயக்குநர், விருப்பப் படம் ஆகியவற்றை தேர்வு செய்தனர். பிற விருதுகளை குழு ஒன்று அமைத்து தேர்வு செய்தனர்.
விருப்ப நடிகர் - ரஜினி
இந்த ஆண்டும் விஜய் டிவி விருதுகள் ரசிகன் எக்ஸ்பிரஸ் மற்றும் விருதுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரசிகர்களின் விருப்ப ஹீரோவாக ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிவாஜியில் அவரது நடிப்புக்காக இந்த விருது கிடைத்துள்ளது.
அதேபோல விருப்பப் படமாக சிவாஜி - போக்கிரி ஆகியவை இணைந்து தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் சிறந்த பொழுதுபோக்காளராக விஜய் தேர்வு செய்யப்பட்டார்.
அமீரின் பருத்தி வீரன் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. வெற்றிமாறனுக்கு (பொல்லாதவன்) சிறந்த இயக்குநர் விருது கிடைத்துள்ளது.
பருத்தி வீரன் மற்றும் பொல்லாதவன் படங்களுக்கு 3 ஜூரி விருதுகளையும் வென்றது.
சென்னை 600028, மொழி, கற்றது தமிழ் ஆகிய படங்களுக்குத் தலா 2 விருதுகள் கிடைத்தன.
சிறந்த நடிகர் - சத்யராஜ்
ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் சிறப்பாக நடித்த சத்யராஜுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது.
சிறந்த புதுமுகங்களுக்கான விருது ஹீரோவில் கார்த்திக்கும் (பருத்தி வீரன்), ஹீரோவில் அஞ்சலிக்கும் (கற்றது தமிழ்) கிடைத்தது.
சிறந்த நடிகையாக பருத்தி வீரன் நாயகி பிரியா மணி தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை நேரு உள்ளரங்கத்தில் நடந்த பிரமாண்ட விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. ரஜினி குசேலன் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் அவர் வரவில்லை. இதையடுத்து குசேலன் படப்பிடிப்பு தளத்திற்கே விஜய் டிவி குழுவினர் நேரில் சென்று விருதினை ரஜினியிடம் வழங்கினர். விருது பெற்ற பெரும்பாலான கலைஞர்கள் நேரில் வந்து விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
செவாலியே சிவாஜி கணேசன் விருதினை, இயக்குநர் மணிரத்தினத்திற்கு இயக்குநர் கே.பாலச்சந்தர் வழங்கினார்.
சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை, சிவாஜி படத்திற்காகப் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், வழக்கம் போல, எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ரத்தினச் சுருக்கமாக கூறினார்.
விருதுகள் விவரம்
விருப்ப நடிகர் - ரஜினிகாந்த் (சிவாஜி)
விருப்ப இயக்குநர் - பிரபுதேவா (போக்கிரி)
பொழுதுபோக்காளர் - விஜய் (போக்கிரி)
விருப்ப படம் - போக்கிரி
சிறந்த படம் - பருத்தி வீரன்.
சிறந்த இயக்குநர் - வெற்றி மாறன் (பொல்லாதவன்)
ஹிட்டாச்சி சிறந்த நடிகர் - சத்யராஜ் (ஒன்பது ரூபாய் நோட்டு)
சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான் (சிவாஜி)
சிறந்த நாயகி (புதுமுகம்) - அஞ்சலி (கற்றது தமிழ்)
சிறந்த நாயகன் (புதுமுகம்) - கார்த்தி (பருத்தி வீரன்)
செவாலியே சிவாஜி விருது - மணிரத்தினம்
தமிழ் திரையுலகுக்கு சிறந்த பங்காற்றியதற்காக பிலிம்நியூஸ் ஆனந்தனுக்கும் விருது அளிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











