லொள்ளு சபா நடிகர்-இயக்குநருக்கு குண்டு மிரட்டல்

வாண வேடிக்கைக்கு பயன்படுத்தப்படும் 10 நாட்டு வெடிகளுடன் ஒயர், பேட்டரி இணைக்கப்பட்டிருந்த இந்த வெடிகுண்டுகள் ஒரே நேரத்தில் இருவரின் முகவரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை கே.கே.நகரில் வசித்து வருபவர் சாமிநாதன் (48). இவர், பல திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். லொள்ளு சபா, சூப்பர் சுந்தரி போன்ற டிவி நிகழ்ச்சிகளிலும் காமெடியனாக நடித்து வருகிறார். இவரது வீட்டிற்கு, நேற்று கூரியரில் பார்சல் ஒன்று வந்தது.
அப்போது வீட்டிலிருந்த சாமிநாதன், பார்சலை கையெழுத்திட்டு வாங்கி பிரித்தார். மயிலாடுதுறை தாலுகா, திருவாவடுதுறையில் இருந்து கே.சித்தார்த் என்ற பெயரில் இது அனுப்பப்பட்டுள்ளது.
உள்ளே, பிளாஸ்டிக் டப்பா ஒன்று இருந்தது. அதிலிருந்து முதலில் விபூதி பொட்டலம் வந்துள்ளது. பின்னர் டப்பாவுக்குள், வாண வேடிக்கைக்கு பயன்படுத்தும் பத்து நாட்டு வெடிகுண்டுகளின் திரிகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு, எலக்ட்ரானிக் போர்டுடன் இணைக்கப்பட்டிருந்தது.
டப்பாவிற்கு கீழே ஒட்டப்பட்டிருந்த பேப்பரில், 'இன்று உனக்கு மரணம் உறுதி. எனக்கு வெற்றி நிச்சயம்' என எழுதப்பட்டிருந்தது. பயந்துபோன சாமிநாதன் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உதவி கமிஷனர் சேது, இன்ஸ்பெக்டர் கவுதமன், நடிகரின் வீட்டிற்கு விரைந்தனர். வெடிகுண்டு டப்பாவிற்குள் ஒயர்கள், பேட்டரி இருந்ததால் வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்ய தனிப்படைக்கு கே.கே.நகர் போலீசார் தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த வெடிகுண்டு செயல் இழப்பு போலீசார், அந்த பார்சலை தனி இடத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது டப்பாவில் இருந்தது டம்மி குண்டு பார்சல் என்று தெரியவந்தது.
ஆனால், 'குண்டுக்குள்' ஒரு கடிதம் இருந்தது. அதில், 'குண்டு வெடித்ததில் நீ இறந்திருப்பாய். உனது வீட்டில் உள்ள மூன்று குழந்தைகளும் இறந்திருக்கும். உனது மனைவி போலீஸ் நிலையத்தில் அழுது கொண்டிருப்பார்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
விஜய் டிவிக்கும்...
இதே போன்று ஒரு பார்சல் நுங்கம்பாக்கத்தில் உள்ள விஜய் டிவி அலுவலகத்திற்கு வந்தது. லொள்ளு சபா நிகழ்ச்சியின் இயக்குநர் ராம்பாலாவின் பெயருக்கு இந்த பார்சல் வந்திருந்தது.
சாமிநாதனுக்கு பார்சல் அனுப்பிய அதே சித்தார்த் என்ற பெயரில் தான் திருவாவடுதுறையிலிருந்து இந்த வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்டுள்ளது.
லொள்ளு சபா நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட யாராவது இந்த வேலையைச் செய்திருக்கலாம் ஏன்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சாமிநாதன் கூறுகையில், லொள்ளு சபா நிகழ்ச்சியில் இயக்குநர் சொன்ன வேலையைச் செய்கிறேன், அவ்வளவுதான். இந்த நிகழ்ச்சியைப் பிடிக்காத யாரோ சிலர்தான் இந்த வெடி பார்சலை எனக்கும் இயக்குநர் ராம்பாலாவுக்கும் அனுப்பி வைத்துள்ளனர் என்றார்.
பார்சல் அனுப்பப்பட்ட திருவாவடுதுறை கூரியர் அலுவலகத்திற்கு சென்று விசாரிக்க, சென்னை தனிப்படை போலீசார் நேற்றிரவு புறப்பட்டனர்.


Click it and Unblock the Notifications











