பாட்டுப் பாடும் குஷ்பு!

முதல்முறையாக ஒரு படத்தில் முழுப் பாடலையும் பாடியுள்ளார் குஷ்பு. ராஜ் டெலிவிஷன் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் வழங்க, முத்துலட்சுமி மூவிஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் 'மகனே... என் மருமகனே...' இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி டி.பி.கஜேந்திரன் இயக்குகிறார்.
இப்படத்தில் விவேக் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு இணையான வேடத்தில், இன்னொரு நாயகனாக மிதுன் நடிக்கிறார். விவேக் ஜோடியாக, யாமினி சர்மா (இந்திரலோகத்தில்... வடிவேலு ஜோடி) நடிக்கிறார். மிதுனுக்கு ஜோடியாக தேன்மொழி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு தினா இசையில் நடிகை குஷ்பு முதன்முறையாக பாடிய பாடல் நேற்று சனிக்கிழமை பதிவானது.
இப்படி ஆரம்பிக்கிறது அந்தப் பாட்டு...
நட்சத்திரம் நட்சத்திரம் பூமியில் பாரு
தினம் ராத்திரியில் உன் கனவில் வருவது யாரு
ரசிகனோட கை தட்டுல ஏறுது போதை
ஒரு ரகசியத்த சொல்லட்டுமா
காதுல கேளு....
என்று சினேகன் எழுதிய வரிகளை நடிகை குஷ்பு பாடினார்.
இது பற்றி குஷ்பு கூறுகையில், டைரக்டர் டி.பி.கஜேந்திரன் எனது நண்பர். அவர் என்னிடம் வந்து இந்த மாதிரி ஒரு பாடல் இருக்கிறது. உங்க குரலில் பாடினா பொருத்தமாக இருக்கும்னு இசையமைபபாளரும் நானும் முடிவு செய்திருக்கோம்னு சொன்னார்.
கேட்டதும் எனக்கு ஒண்ணுமே புரியல. அதே சமயம் அந்த வாய்ப்பினைத் தட்டவும் முடியல. ஒத்துக்கவும் முடியல. சரி பாடித்தான் பார்க்கலாமேன்னு பதட்டத்தோடுதான் வந்தேன்.
பாடலை பாடும் போது அந்த பதட்டத்தை இசையமைப்பாளர் தினா போக்கி, ஒரு குழந்தைக்கு சொல்லிக்கொக்கிற மாதிரி சொல்லிக்கொடுத்தார்.
அதே போல எளிமையான வரிகளை எழுதிக்கொடுத்து சுலபமாக பாட உதவினார் பாடலாசிரியர் சினேகன். பின்னனி பாடுவது எவ்வளவு கஷ்டம் என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.
இசையை முறையான பயிற்சியோட பாடனும். அதற்கு இசைஞானம் ரொம்ப முக்கியம். நான் அப்படி இல்லாமல் பாட வந்தது ஒரு குற்ற உணர்ச்சியாக இருந்தது.
என் குரல் எப்படி இருக்குமோ என்று பயந்தேன். இப்போது பாடலை கேட்டுவிட்டு இயக்குநரும், இசையமைப்பாளரும் மகிழ்ச்சி அடைந்ததோடு, என்னை பாராட்டினார்கள். அது எனக்கு மிகப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. உங்களுக்கும் பிடிக்கும்'' என்றார்.


Click it and Unblock the Notifications











