twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழில் காதல் படம் என்றால் அது முரளிதான்-சரோஜாதேவி புகழாரம்

    By Sudha
    |

    Saroja Devi
    தமிழ் சினிமாவில் காதல் படம், காதல் பட நாயகன் என்றால் உடனே முரளிதான் நினைவுக்கு வருவார். நல்ல நடிகராக, நல்ல குடும்பத் தலைவராக, நல்ல தந்தையாக இருந்தவர் முரளி என்று மறைந்த நடிகர் முரளிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் நடிகை சரோஜாதேவி.

    நடிகர் முரளியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பெங்களூரில் கன்னடத் திரையுலகம் சார்பில் கூட்டம் நடந்தது.

    சரோஜாதேவி, நடிகர் ராகவேந்திரா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பேசினர். சரோஜாதேவி பேசுகையில்,

    நடிகர் முரளி சின்ன வயதில் மரணம் அடைந்திருப்பது மிகுந்த வருத்தத்தையும் வேதனையும் அளிக்கிறது. தர்மதேவன் என்ற படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது, தனது தந்தையின் பெயரை சொல்லி முதன் முதலில் முரளி என்னிடம் அறிமுகம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் நடிப்பதாகவும் கூறினார்.

    அப்போது அவரை எனக்கு தெரியாது. ஆனாலும் தமிழ் சினிமாவில் நடித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று நான் ஆசீர்வாதம் செய்தேன். அதுபோல போட்டி நிறைந்த தமிழ் சினிமாவில் நடிகர் முரளி தனக்கு என ஒரு நற்பெயரை வளர்த்து கொண்டார்.

    கன்னடத்தில் அவர் நடித்து வெளிவந்த அஜய்-விஜய் படத்திற்கு விருது கிடைத்தது. அந்த விருது கிடைக்க நான் ஏற்பாடு செய்தேன்.

    தமிழ் சினிமாவில் காதல் படம் என்றால் அது முரளி தான் ஞாபகம் வரும். முரளி நடித்த இதயம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்திற்கு விருது கிடைக்க நான் பரிந்துறை செய்தேன். அதுபோல விருதும் கிடைத்தது.

    கடைசியாக முரளி தன்னுடைய மகனை சினிமாவில் அறிமுகம் செய்து நடித்தார். அவருடைய மகனும் சினிமாவில் சிறப்பான இடத்திற்கு வரவேண்டும். முரளியின் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. அதற்குள் முரளி மரணம் அடைந்து விட்டார். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும். இந்த துக்கத்தை தாங்கி கொள்ள முரளியின் குடும்பத்தினருக்கு கடவுள் சக்தி கொடுக்க வேண்டும் என்றார்.

    மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனான ராகவேந்திரா ராஜ்குமார் பேசுகையில், பெங்களூரில் இருந்த நடிகர் முரளியின் வீடும், எங்களுடைய வீடும் அருகருகே இருந்தது. சிறு வயதில் அவரும் என்னுடைய வீட்டுக்கு வந்து விளையாடுவார். நானும் அவருடைய வீட்டிற்கு சென்று விளையாடுவேன். ஆனால் நடிகர் முரளி சென்னைக்கு சென்ற பிறகு எங்களுக்குள் இருந்த தொடர்பு குறைந்து விட்டது.

    நடிகர் முரளி நடனத்திலும், நடிப்பிலும் சிறந்து விளங்கினார். அவருடைய மறைவை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. முரளியின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X