twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ரசிகர்களைச் சந்திக்க ரஜினி திட்டம்!

    By Sudha
    |

    Rajini
    சென்னை: மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்கு ரசிகர்களை அழைக்க முடியாத குறையைப் போக்க, அவர்களை நேரில் அழைத்துப் பேசி விருந்தளிக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

    இந்தச் சந்திப்பின்போதே தனது அரசியல் பிரவேசம் பற்றிய அனைத்து யூகங்களுக்கும் ரஜினி பதிலளிப்பார் என்று கூறப்படுகிறது.

    ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். கடிதங்களும் அனுப்பி வருகிறார்கள். எந்திரன் வெளியீட்டுக்குப் பிறகு இதுகுறித்து விவாதித்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ரசிகர் சந்திப்பின்போது ரஜினி கூறியிருந்தார்.

    இன்னும் சில தினங்களில் எந்திரன் வெளியாகப் போகிறது. எனவே வாக்களித்தபடி ரசிகர்களைச் சந்திக்கவும், மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்காக அவர்களுக்கு சிறப்பு விருந்தளிக்கவும் ரஜினி முடிவு செய்துள்ளார். ஏற்கெனவே இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார் ரஜினி.

    இப்போது சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்யுமாறு தனது மன்றத்தின் தலைமை நிர்வாகிகள் மற்றும் நெருங்கிய நண்பர்களிடம் கூறியுள்ளார்.

    இந்தக் கூட்டத்தில் அவர் தனது அரசியல் முடிவை அறிவிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

    ஆனால் நேற்று திருமலையில் பேட்டியளித்த ரஜினி, "அரசியல் குறித்து இப்போது பேசும் சூழல் இல்லை" என்று கூறியுள்ளது நினைவிருக்கலாம். எனவே இந்த சந்திப்பில், தனது அரசியல் பிரவேசம் உடனடியாக சாத்தியமில்லை என்பதை அவர் அறிவிக்கக் கூடும். அதே நேரம், ரசிகர்களை ஒருங்கிணைத்து தனது பலத்தைத்தெரிந்து கொண்டு ஓரிரு ஆண்டுகளில் புதிய முடிவை அறிவிக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பு மிகப் பெரிய அளவில், யாரும் நினைத்துக் கூடப் பார்த்திராத முறையில் நடக்க வேண்டும் என்று ரஜினி விரும்புகிறார். ஆனால் இந்த சந்திப்புக்கு வரும் பல லட்சம் ரசிகர்களால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் எழக்கூடாது என்பதும் அவர் எண்ணமாக உள்ளது. எனவே மூன்று அல்லது நான்கு முக்கிய நகரங்களில் வைத்து இந்தச் சந்திப்பை நடத்தும் திட்டம் தயாராகியுள்ளது.

    அதன்படி சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி அல்லது நெல்லையில் ரசிகர்களை வெவ்வேறு தேதிகளில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். வட மாவட்ட ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து பிரமாண்ட முறையில் விருந்து தரவிருக்கிறார்.

    இதற்காக தீவுத் திடல் அல்லது நேரு உள்விளையாட்டு அரங்கு உள்ளிட்ட பல்வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, சென்னை நகருக்கு வெளியிலும் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்யுமாறு தனது நண்பர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம் ரஜினி.

    நாளை சென்னையில் நடக்கும் எந்திரன் ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்குப் பிறகு இந்த சந்திப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறார் ரஜினி.

    நிர்வாகிகள் மட்டும் என்றில்லாமல், ரஜினி ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக உள்ள அனைவரையுமே அழைக்க ரஜினி முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X