தசாவதாரம்-அமிதாப் வருகை உறுதி

கலைஞானி கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்துள்ள பிரமாண்டப் படம் தசாவதாரம். பல்வேறு காரணங்களால் பல மாதங்களாக படம் வெளியாவதும், ஆடியோ வெளியீடும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. ஆசினும், மல்லிகா ஷெராவத்தும் இப்படத்தில் கமலுடன் ஜோடி சேர்ந்துள்ளனர். ஹிமேஷ் ரேஷமய்யா இசையமைத்துள்ளார்.
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக சென்னையில் உள்ள நேரு உள்ளரங்க மைதானத்தில் ஏப்ரல் 25ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிடுகிறார். அதை அமிதாப் பச்சன் பெற்றுக் கொள்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இதில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சமீபத்தில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் விழாவின்போது அமிதாப் பச்சனும், ஜாக்கிசானும் ஒன்றாக கலந்து கொண்டனர். அப்போதே இருவருக்கும் இடையே நல்ல நட்பு உருவானது. இப்போது 2வது முறையாக கமல் பட விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஏப்ரல் 25ம் தேதி மியாமியிலிருந்து வருகிறார் அமிதாப் பச்சன்.
இந்த நிலையில் தனது அடுத்த படமான மர்மயோகிக்கான வேலைகளில் படு மும்முரமாக இறங்கியுள்ளார் கமல். இப்படத்தை வால்ட் டிஸ்னியும், பரத் பாலாவும் இணைந்து தயாரிக்கவுள்ளனர். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தியிலும் இப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் கமல்.
இப்படம் தொடர்பான முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையை வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் நடத்தி முடித்துள்ளாராம் கமல்.


Click it and Unblock the Notifications











