ஜெயாவை மன்னிப்பு கேட்க செய்தேன்: அமிதாப்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை குறி வைத்து மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தொடர்ந்து அம்புகளை எய்து வருகிறது. ஒவ்வொரு முறையும் அமிதாப் பச்சன் தனது சாதுரியத்தால் அவற்றை திறம்பட சமாளித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஜெயா பச்சன்ர ரூபத்தில் புதுப் பிரச்சினை கிளம்பியது. பட ஆடியோ விழாவில் கலந்து கொண்ட ஜெயா பச்சன், மகாராஷ்டிர மக்களே மன்னித்துக் கொள்ளுங்கள். நான் உ.பியைச் சேர்ந்தவள். எனவே இந்தியில் பேசுகிறேன் என்று கூறியது பெரும் பிரச்சினையாகி விட்டது.
ஜெயா பச்சன் மகாராஷ்டிராவையும், மராட்டிய மக்களையும் இழிவுபடுத்தி விட்டார், எனவே அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை பச்சன் படங்களை திரையிட விட மாட்டோம் என போர்க்கொடி உயர்த்தியது ராஜ் தாக்கரே கட்சி.
இதையடுத்து ஜெயா பச்சன் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் மராட்டியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளது சேனா.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் எழுதியுள்ளார். அதில், ஆடியோ வெளியீட்டின்போது ஜெயா சாதாரணமாக பேசியது, மனதில் எந்த துவேஷமும் இல்லாமல், உள்நோக்கமும் இல்லாமல் பேசியது பிரச்சினையாகி விட்டது.
இருப்பினும் இந்த பேச்சு, மகாராஷ்டிராவின், மகாராஷ்டிர மக்களின், மும்பை மக்களின், மும்பை நகரின் உணர்வுகளைப் புண்படுத்தியிருந்தால் அதற்கு அவர் மன்னிப்பு கேட்டுத்தான் ஆக வேண்டும். இதைநான் அவரிடம் கூறினேன். அவரும் மன்னிப்பு கேட்டு கொண்டார்.
இன்று எங்களுக்குக் கிடைத்துள்ள அனைத்துமே இந்த அருமையான மாநிலத்திலிருந்தும், இந்த மாநகரத்திலிருந்தும் கிடைத்தவையே.
மும்பையும், மகாராஷ்டிராவும் எங்களுக்குப் புகழையும், அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளன. எனக்கு 66 வயதாகிறது. இதில், 40 ஆண்டுகள் நான் மும்பையில்தான் செலவழித்துள்ளேன். இப்படிப்பட்ட நிலையில் நாங்கள் இந்த நகரை அவமதிப்போமோ?, ஒரு போதும் செய்ய மாட்டோம் என்று உணர்ச்சிப் பூர்வமாக எழுதியுள்ளார் அமிதாப்பச்சன்.


Click it and Unblock the Notifications











