கமல்-விஜயகாந்த்துக்கு பத்திரிக்கையாளர்கள் பாராட்டு!

நடிகர் சங்கக் கண்டனக் கூட்டத்தில், உச்ச நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை சரமாரியாக பேசித் தள்ளினர். பத்திரிக்கையாளர்களை மட்டுமின்றி அவர்களது ஆயா வரை போய் ஆபாசமாக பேசினார் விவேக்.
இதனால் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பும், கோபமும் நிலவுகிறது. இருந்தாலும் சேற்றில் மலர்ந்த செந்தாமரையாக சில நடிகர்களை நினைத்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், மனம் விட்டுப் பாராட்டியுள்ளனர்.
அந்த நடிகர்கள் - கமல்ஹாசன், விஜயகாந்த், தாமு. இவர்களில் கமல்ஹாசன் இந்தக் கூட்டத்துக்கே வர முடியாது என்று தில்லாக கூறி விட்டாராம். எதற்காக இந்தக் கூட்டம் என்றும் கேட்டு தன்னைத் தேடி வந்தவர்களை திருப்பி விட்டாராம்.
அவசரப்படாமல், புத்திக்கு வேலை கொடுத்து கமல்ஹாசன் செயல்பட்டுள்ளது உண்மையில் பாராட்டப்பட வேண்டியதே.
அதேபோல விஜயகாந்த் இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தார். சுருக்கமாக பேசினார், சரியாகப் பேசினார், நிலை தடுமாறாமல் பேசினார். நடிகர் சங்க உறுப்பினர் என்ற வகையில் அந்த வட்டத்துக்குள் நின்றபடி, தனது தகுதி, தரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நிலை தடுமாறாமல் அவர் பேசி விட்டுச் சென்றார்.
தங்களைப் பற்றிய விமர்சனத்திற்கு நிச்சயம் யாராக இருந்தாலும் எதிர்ப்பைக் காட்டத்தான் செய்வார்கள். அது உலக நியதி. அதேசமயம், அந்த எதிர்ப்பைக் காட்டும்போது நிதானம் மிக அவசியம் என்பதை விஜயகாந்த்தின் பேச்சு வெளி்ப்படுத்தியது. அந்த வகையில் விஜயகாந்த்துக்கும், பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஏக வரவேற்பு.
ஆனால் இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டார் தாமு. மிகச் சிறிய நடிகர்தான் தாமு. முன்னணி நடிகர்களுடன் துண்டு துக்கடா ரோல்களில்தான் இவரை திரையுலகம் பயன்படுத்தி வருகிறது. இருந்தாலும் தனது தனித்திறமையால் தனித்து ஜொலி்ப்பவர் தாமு.
நடிகர் சங்கக் கூட்டத்தில் இவரும் பேசினார். ஆனால் பெரிய நடிகர்களுக்குக் கூட இல்லாத தைரியமும், நிதானமும், துணிச்சலும், புத்திசாலித்தனமும் இவரது பேச்சில் வெளிப்பட்டது.
கிட்டத்தட்ட நடிகர் சங்கத்துக்கே அறிவுரை கூறுவது போல அமைந்திருந்தது அவரது பேச்சு. இப்படிப் பேசப் போக இப்போது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் தாமு இப்போது ஹீரோவாகி விட்டார்.
நேற்று நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இவர்களைப் பாராட்டித்தான் பேச்சு நிலவியது.


Click it and Unblock the Notifications











