twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முத்துக்குமார் பெயர் சூட்டுங்கள்!-சத்யராஜ்

    By Staff
    |

    Sathya Raj and Sundhar C with Hemamalini
    தான் அடுத்து நடிக்கும் குருசி்ஷ்யன் படத்தில் சுந்தர் சி கதாபாத்திரத்துக்கு தியாகி முத்துக்குமார் பெயர் சூட்ட வேண்டும் என நடிகர் சத்யராஜ் கோரிக்கை விடுத்தார்.

    சக்தி சிதம்பரம் இயக்கத்தில், சுந்தர் சி மற்றும் சத்யராஜ் இருவரும் இணைந்து குரு சிஷ்யன் என்ற படத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் துவக்க விழா நேற்று சென்னையில் நடந்தது.

    விழாவில் பிரபல இயக்குநர்களும், அவர்களிடம் உதவியாளர்களாக இருந்து பின்னர் பிரபல இயக்குநர்களானவர்களும் பங்கேற்றுப் பேசும்படி ஏற்பாடு செய்திருந்தார் சக்தி சிதம்பரம்.

    பாக்யராஜ்-பார்த்திபன், ராம.நாராயணன்-பேரரசு, மணிவண்ணன்-சீமான், கே.எஸ்.ரவிக்குமார்-சேரன் ஆகிய குரு-சிஷ்யர்கள் தங்கள் அனுபவங்களை, படவிழாவில் பகிர்ந்துகொண்டது சினிமாவை விட சுவாரஸ்யமாக இருந்தது.

    நடிகைகளை திரும்பச் சொல்வது ஏன்...?

    நடிகர் - இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது:

    "எங்க டைரக்டர் கிட்ட வேலை பார்த்த நாட்கள் மறக்கமுடியாதவை. அடிக்கடி எங்க டைரக்டர் பாரதிராஜாகிட்ட, 'நடிகர்- நடிகைகளை இந்த பக்கம் திரும்பு...அந்த பக்கம் திரும்பு என்று சொல்கிறீர்களே...அது எதற்காக?' என்று சந்தேகம் கேட்பேன். 'அதை திரையில் பார்த்து தெரிந்துகொள் அல்லது ஐந்து வருடங்கள் உதவி டைரக்டராக வேலை செய், தெரியும்!' என்பார். எதுக்காக அவர் அப்படிச் சொன்னார் என்பதை நான் இயக்குநரான பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

    இன்னொன்று, குறைந்த பட்சம் வெளியில் நடக்கும் சமாச்சாரங்களை தொடர்ந்து கவனிச்சிக்கிட்டே இருக்கணும்னு எங்க டைரக்டர் சொல்வார். அது ஒவ்வொரு உதவி இயக்குநருக்கும் மிக மிக முக்கியமானது...", என்றார்.

    அவரது சிஷ்யர்களுள் ஒருவரான பார்த்திபன் பேசுகையில், "உலகிலேயே மிக அழகான உறவு, குரு-சிஷ்யன் உறவுதான். எனக்கு கிடைக்கும் பாராட்டு, புகழ் அத்தனையும் என் குரு பாக்யராஜுக்கே போய் சேரும்", என்றார்.

    வாய்ப்பு கொடுங்க...!

    இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் பேசியது:

    "ஒரு இயக்குநராகத் தெரிந்து கொண்டதைவிட நடிகராக நிறைய தெரிந்து கொண்டேன்.

    இப்போது எனக்கு நடிப்பதற்குத்தான் வாய்ப்பு வருகிறது. டைரக்டு செய்வதற்கான வாய்ப்பு வருவதில்லை. சசிகுமார் போன்றவர்கள் எனக்கு அந்த வாய்ப்பை தரவேண்டும்", என்றார்.

    மணிவண்ணன் சி்யர்களுள் ஒருவரான சீமான் இப்படிப் பேசினார்:

    "அமைதிப்படை கதையை ஒரு நீச்சல் குளத்தின் அருகில் அமர்ந்துதான் முடிவு செய்தோம்.

    ஒரு ஊருக்குள் இரும்பு தொப்பி போட்ட போலீஸ்காரன் வருகிறார் என்று ஒரு உதவி இயக்குநர் சொல்ல-ஏன் வந்தான்? என்று இன்னொரு உதவி இயக்குநர் கேட்க-அந்த ஊரில் நடக்கும் ஜாதி கலவரத்தை அடக்க என்று இன்னொருவர் சொல்ல-அந்த கலவரத்துக்கு காரணம் என்ன? என்று கேட்க-அந்த ஊரில் உள்ள ஒரு அரசியல்வாதி என்று பதில் சொல்ல...அமைதிப்படை கதை இப்படித்தான் உருவானது... புதிய சாதனைப் படைத்தது," என்றார்.

    சம்பள விஷயத்தைக் கற்றுத் தராத ரவிக்குமார்!

    கே.எஸ்.ரவிகுமார் பேசும்போது, "சேரன் என்னிடம் உதவி இயக்குநராக இருந்தபோதே அவருக்குள் ஒரு நடிகர் இருப்பதை கவனித்தேன். அவருக்கு கிடைக்கும் பாராட்டுகளை பார்த்து, நான் சந்தோஷப்படுகிறேன்," என்றார்.

    அவரது சிஷ்யர் சேரன் பேசும்போது, "எவ்வளவு உயரத்துக்கு போனாலும் சிஷ்யர்கள், சிஷ்யர்கள்தான். குருக்களை மிஞ்ச முடியாது. எங்க டைரக்டர் எடுத்த மாதிரி, ஒரு தசாவதாரத்தை' நாங்க எடுக்க முடியுமா? எல்லா விஷயத்தையும் எங்களுக்கு கற்றுக்கொடுத்த டைரக்டர், சம்பள விஷயத்தை மட்டும் கற்றுக்கொடுக்கவில்லை. அந்த விஷயத்தில், நான் ஒரு ஏமாளி" என்றார்.

    ராம.நாராயணன்- பேரரசு

    இயக்குநரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான ராம.நாராயணன் பேசியதாவது:

    "பாட்டெழுத வேண்டும் என்றுதான் நான் சினிமாவுக்கு வந்தேன். இயக்குநராகி விட்டேன். அதேபோல் என்னிடம் உதவி டைரக்டராக இருந்த பேரரசுவும் பாடல் எழுத வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவுக்கு வந்தார். இரண்டு பேருமே குறுகிய காலத்தில் படம் எடுப்பவர்கள்.

    திருப்பதி ஏழுமலை வெங்கடேசா' என்ற படத்தை 24 ஆயிரம் அடியில், 22 நாட்களில் எடுத்து முடித்தேன். இப்போது உள்ள சில டைரக்டர்கள், 5 லட்சம் அடிக்கு படம் எடுக்கிறார்கள்", என்றார்.

    பேரரசு பேசும்போது, "எளிமையே வலிமை என்பது எங்கள் குருநாதர் ராம.நாராயணனின் தாரக மந்திரம். அவர் வழியில்தான் நானும் செல்கிறேன்" என்று கூறினார்.

    விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், சுந்தர் சி, சசிகுமார், எடிட்டர் மோகன், டைரக்டர் ராஜா மற்றும் பலரும் பேசினார்கள். ஷக்தி சிதம்பரம் நன்றி கூறினார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X