சிலந்தி- நல்ல 'வலை'!

இசை: எம்.கார்த்திக்
ஒளிப்பதிவு: பௌசியா பாத்திமா
கதை- திரைக்கதை-வசனம்-இயக்கம்: ஆதி
சென்னை போன்ற பெருநகரங்களில் கால் சென்டர்- ஐ.டி. கலாச்சாரம் எப்படியெல்லாம் இளம்பெண்களைச் சீரழிக்கிறது என்பதை மையமாக வைத்து புதிய இயக்குநர் ஆதி இயக்கியிருக்கும் த்ரில்லர் சிலந்தி.
புதுமணத் தம்பதி மோனிகா-முன்னா தேனிலவுக்காக பாண்டிச்சேரியில் ஒரு தனிமையான உல்லாசத் தீவில் தங்குகிறார்கள். அப்போது அந்த விருந்தினர் மாளிகையில் யாரோ தன்னைத் துரத்துவதைப் போல உணர்கிறார் மோனிகா. அடுத்த நாளே அவரது தோழிகள் மூவர் அடுத்தடுத்து மர்மமாகக் கொல்லப்படுகிறார்கள்.
இந்தக் கொலைகளின் பின்னணி என்ன என்பதுதான் இடைவேளைக்குப் பிந்தைய மறுபாதிக் கதை.
48 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 கொலைகள், அதன் பின்னணியில் ஒரு அதிர்ச்சிகரமான, ஆனால் அன்றாட வாழ்வில் அதுபற்றித் தெரிந்தும் கொஞ்சமும் நாம் அலட்டிக் கொள்ளாத கலாச்சார சீரழிவு என்ற முடிச்சை தனது முதல் படத்துக்குக் கருவாக்கிய ஆதியைப் பாராட்டத்தான் வேண்டும்.
இந்த புதிய இயக்குநர், யாரிடமும் திரைக் கலையைக் கற்காமல் நேரடியாகவே இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். எனவே சில காட்சிகளில் அந்த அமெச்சூர்த்தனம் தெரிந்தாலும், அதை இரண்டாவது பாதியில் சரிகட்டிவிடுகிறார்.
மோனிகாதான் படத்தின் பலம். முடிந்தவரை உள்ளாடை, ஒரு ரவிக்கை மட்டும்தான் அவர் காஸ்ட்யூம்கள். தனது இளமையை படம் நெடுக விருந்தாகப் படைக்கிறார். மோனிகாவிடம் இனி காட்டுவதற்கு கவர்ச்சி ஏதும் மிச்சமில்லாமல் செய்துவிட்டார்கள்.
புதுமுகம் முன்னா பரவாயில்லை. நடிக்க முயற்சித்திருக்கிறார். படத்தின் பெரிய ப்ளஸ் புதுமுக வில்லன் சந்துரு. மிக எதார்த்தமான முகம், இயல்பான நடிப்பு என அசத்துகிறார். ஒரு அப்பாவி இன்ஷூரன்ஸ் ஏஜென்டாக இருந்து கொடூரமான வில்லனாக அவர் மாறுவதை ரொம்பவும் இழுக்காமல் சட் சட்டென்று காட்சிப்படுத்தியிருப்பது ஆறுதல்.
பின்னணி இசை ஓ.கே. சந்தனவேட்டைக்காரா... பாடல் மனதில் நிற்கிறது.
பௌசியாவின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். எடிட்டிங்கில் இன்னும் வேகத்தைக் கூட்டியிருக்கலாம்.
சிலந்தி- நல்ல 'வலை'!
(படத்தின் வேகமும் மோனிகாவின் கவர்ச்சியும் படத்தை நிச்சயம் காப்பாற்றிவிடும். பின்னர் ஏதற்காக படத்தின் விளம்பரத்துக்காக அவ்வப்போது சில பரபரப்பு பிட்டுகளை தாங்களாகவே பரப்பி விட்டார்களோ.. தேவையே இல்லையே ஆதி..)


Click it and Unblock the Notifications











