ஈரம் படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் 'ஓபன் ஆபர்'

நேற்று இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினி பங்கேற்று ஆடியோவை வெளியிட்டார்.
சன் டிவியின் துணைத் தலைவர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா விழாவில் பேசுகையில்,
“பொதுவாக இயக்குநர் ஷங்கர் பற்றி ஒரு குற்றச்சாட்டு உண்டு. தான் தயாரிக்கும் படத்துக்கு குறைவாக செலவு செய்யும் அவர், தான் இயக்கும் படங்களுக்கு மட்டும் பெரிய பட்ஜெட் போட்டு விடுகிறார் என்பார்கள். சில தினங்களுக்கு முன் என்னிடம் கூட இதைக் கூறினார்கள்.
இங்கே ஒன்றை நான் கூற வேண்டும்… சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ரூ.150 கோடிக்கு மேல் செலவழித்து எந்திரனை எடுக்கக் காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினி - ஷங்கர் மீதுள்ள நம்பிக்கைதான்.
இந்தப் படத்துக்கு ரஜினி அவர்களும், ஷங்கரும் உழைத்துள்ள உழைப்பு அபாரமானது. அதைப் பார்த்து கலாநிதி மாறன் அவர்களே பெரிதும் வியந்து போனார்.
எந்திரனின் ஒவ்வொரு ப்ரேமையும் பார்த்துப் பார்த்து இழைத்துள்ளனர் ரஜினியும் ஷங்கரும். இந்தப் படம் வெளியானால் இந்திய சினிமாவின் உச்சகட்டமாக அமையும் என்பதை மட்டும் கூறிக் கொள்வேன்.
சூப்பர் ஸ்டார் நடித்து பெரும் வெற்றி கண்ட நினைத்தாலே இனிக்கும் படத்தின் இப்போதைய ரீமேக்கை சன் நிறுவனம் வாங்கியுள்ளது. அந்தப் பெயரில் அப்படி ஒரு ஈர்ப்பு உள்ளது.
இப்போது ஷங்கர் அவர்களுக்கு சன் டிவி சார்பில் ஒரு கோரிக்கை வைக்கிறேன். இந்த ஈரம் படத்தைப் பார்க்கும் போதே இது ஒரு மிகச் சிறந்த படம் என்பது புரிந்துவிட்டது. எனவே இந்தப் படம் ஏன் சன் பிக்சர்ஸ் பேனரில் வரக் கூடாது... ஷங்கர் சார், இதை ஒரு பிஸினஸ் ஆஃபராக வைக்கிறேன். இந்தப் படத்தை நாங்கள் வெளியிட விரும்புகிறோம்', என்றார்.
இதற்கு ஷங்கர் எந்த மறுமொழியும் உடனடியாகக் கூறவில்லை. சிரித்தபடி அமைதியாக இருந்தார்.


Click it and Unblock the Notifications











