தனம் இயக்குநருக்கு கண்டனம்!!

சமீபத்தில் திரைக்கு வந்த படம், தனம். இந்த படத்தை பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்த ஜி.சிவா என்பவர் டைரக்டு செய்துள்ளார். விபசாரம் செய்து வரும் தாசியை, ஒரு பிராமண இளைஞர் காதலித்து மணக்கிறார். இவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தையை, ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ள பிராமண குடும்பத்தினர் கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்கிறார்கள். இதுதான், தனம் படத்தின் கதை.
இந்த படத்துக்கு இப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெறும் பப்ளிசிட்டிக்காகவும் பரபரப்புக்காகவும் இப்படியொரு கதையை இயக்குநர் படமாக்கியிருப்பதாக இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இன்னும் சிலர் போனில் இயக்குநருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவலும் தெரிகிறது.
மூட நம்பிக்கையை ஒழிப்பதற்குப் பதில், அதை புதிய வடிவில் கற்றுத் தர முயன்றுள்ளார் இந்த இயக்குநர். படம் பரபரப்பாகப் பேசப்பட வேண்டும் என்பதற்காக எடுக்கப்படும் இத்தகைய நச்சுக்களை அனுமதிக்கக் கூடாது என பெண்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த சுதாராணி தெரிவித்துள்ளார்.
இந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் சிவா, இந்தப் படத்தில் நான் காட்டியிருக்கும் காட்சிகள் சரிதான் என்றும் யாருடைய மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன் என்றும் கூறினார்.
தனம் படம், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான படம். ஜோதிடர் கூறிவிட்டார் என்பதற்காக ஒரு பச்சிளம் குழந்தையை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்வதுதான் படத்தின் மைய காட்சி. இது, தாய்மார்களுக்கான படம். எந்த சமுதாயத்தையும் நோகடிப்பது போல் படத்தில் காட்சிகள் இல்லை. இதே படத்தைத் தெலுங்கிலும் இயக்கப் போகிறேன் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications











