ஜாகிர் உசைனுக்கு இரண்டாவது முறையாக கிராமி விருது

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆண்டுதோறும் சிறந்த இசைக்கலைஞர்களுக்கான கிராமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குளோபல் டிரம் ப்ராஜக்ட் என்ற ஆல்பத்திற்கு சிறப்பாக இசை அமைத்ததற்காக, சிறந்த சர்வதேச இசை ஆல்பம் பிரிவுக்கான கிராமி விருது ஜாகிர் உசைனுக்கு வழங்கப்பட்டது. இது இவருக்கு கிடைக்கும் இரண்டாவது கிராமி விருதாகும்.
இவர் தனது முதல் கிராமி விருதை 1992ல் பிளானட் டிரம் என்ற ஆல்பத்துக்காக வென்றுள்ளார்.
தற்போது அவர் ஜாஸ் கலைஞர் கியாவனி ஹிடல்கோ மற்றும் மைக்கி ஹார்ட் என்ற ராக் இசைக்குழு கலைஞர் ஆகியோருடன் இணைந்து இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளார்.
ஜாகிர் உசைனை தவிர்த்து லட்சுமி சங்கர், டெபாசிஸ் பட்டாச்சார்யா ஆகிய இரண்டு இந்தியர்களும் பாரம்பரிய உலக இசைக்கான கிராமி விருதுக்கு நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை.
ஜாகிர் உசைன் கூறுகையில்,
இந்த விருது எனது கடும் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இரண்டாவது முறையாக கிராமி விருது வென்றது தற்போதிருக்கும் இளைஞர்களுக்கும் எனது இசை மிகவும் பிடித்துள்ளதை காட்டுகிறது. இது மகிழ்ச்சியையும், முழு திருப்தியையும் தருகிறது.
ஏஆர் ரகுமான் திறமையானவர். அவருக்கு சர்வதேச அளவில் விருதுகள் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் தொடர்ந்து தனது திறமையை நிரூபித்து வருகிறார். அவரால் நாம் அனைவரும் பெருமை அடைந்துள்ளோம். அவர் நிச்சயம் ஆஸ்கார் விருது வெல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் ஜாகிர் உசைன்.


Click it and Unblock the Notifications











