அமிதாப்புக்கு வயது 66

60 வயதுகளிலும் இந்தித் திரையுலகின் அசைக்க முடியாத ராஜாவாக திகழ்ந்து வரும் அமிதாப்புக்கு இன்று 66வது பிறந்த நாளாகும். இதையொட்டி மும்பையில் உள்ள தனது வீட்டில் மனைவி, குழந்தைகள், பேரக் குழந்தைகளுடன் எளிமையாக கொண்டாடினார். படப்பிடிப்புக்கு இன்று டாடா காட்டி விட்டார்.
மும்பையின் ஜல்சா பகுதியில் உள்ள அமிதாப்பின் வீட்டுக்கு இன்று பெரும் திரளான ரசிகர்கள் குவிந்திருந்தனர். இதனால் அந்தப் பகுதியே விழாக் கோலம் பூண்டிருந்தது.
இந்த பிறந்த நாள் அமிதாப்புக்கு நிச்சயம் சந்தோஷமானது. காரணம் அவர் நடிப்பில் வெளியான சர்க்கார் ராஜ், பூத்நாத், காட் துஸ்ஸி கிரேட் ஹோ, தி லாஸ்ட் லியர் ஆகியவை வெற்றி பெற்றுள்ளன.
இதுதவிர உலகின் மிகப் பெரிய திரை நிகழ்ச்சியாக கருதப்படும் அன்பர்கட்டபிள் டூர் என்ற நிகழ்ச்சியை தனது மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களோடு சிறப்பாக பங்கேற்றார் அமிதாப்.
வயிற்று வலியால் அவதி:
பிறந்த நாளும் அதுவுமாக அமிதாப்பச்சனுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
லீனா யாதவ் இயக்கத்தில் "டீன் பாட்டி' என்ற படத்தில் நடித்து வரும் அமிதாப் படப்பிடிப்பின் இடையே ஜூகு பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு வந்தார்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த அவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். வலியால் துடித்த அமிதாப்பை உடனை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள நானாவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அமிதாப்புடன் அவரது மகள் ஸ்வேதா, மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா ஆகியோர் உடன் சென்றனர். அங்கு சுமார் ஒரு மணிநேரம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதயம் மற்றும் வயிறு எக்ஸ்-ரே எடுக்கப்பட்டது.
பின்னர் 12.40 மணியளவில் லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த ரசிகர்கள் அமிதாப்பின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு வெளியில் குழுமியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











