ராகினி-சுந்தருடன் தேவா!

இசையமைப்பாளர்கள் நடிகராக வருவது புதிதல்ல. முன்பு சங்கர் கணேஷ் நடித்தார். பிறகு எம்.எஸ்.விஸ்வநாதன் நடித்தார். சந்திரபோஸ் தற்போது டிவி தொடரில் நடித்து வருகிறார்.
இந்த வரிசையில் தற்போது தேனிசைத் தென்றல் தேவா இணைகிறார். நமிதா- சுந்தர். சி - ராகினி ஜோடியில் உருவாகும் தீ படத்தில் கேரக்டர் ரோலில் நடிக்கிறாராம் தேவா.
கிச்சா இப்படத்தை இயக்குகிறார். சத்யராஜ் - கவுண்டமணியை வைத்து சமீபத்தில் தங்கம் என்கிற ஹிட் படத்தைக் கொடுத்தவர்தான் கிச்சா.
தற்போது சுந்தர்.சியை வைத்து தீ படத்தை இயக்குகிறார் கிச்சா. இப்படத்தில் என்கெளன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக வருகிறாராம் சுந்தர்.சி.
விவேக், ஐஸ்வர்யா, சாயாஜி ஷிண்டே ஆகியோரும் படத்தில் உள்ளனர்.
படத்தில் நடிப்பது குறித்து தேவா கூறுகையில், நடிப்பதை ஆரம்பத்திலிருந்தே நான் விரும்பியதில்லை. இருப்பினும் என்னை கஷ்டப்படுத்தி சமாதானப்படுத்தி நடிக்க வைத்து விட்டார்கள். எனக்கு மிகவும் கனமான பாத்திரம் கொடுத்துள்ளனர். அந்த கேரக்டர் எனக்கும் பிடித்துப் போனதால்தான் நடிக்க சம்மதித்தேன். நான் நன்றாக நடித்துள்ளேனா என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.
எனது நடிப்பை அவர்கள் விரும்பா விட்டால் நிச்சயம் நான் தொடர்ந்து நடிக்க மாட்டேன் என்றார் தேவா.
இந்தப் படத்தில் இன்னொரு விசேஷம் இருக்கிறது. தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவாதான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறதாம் தீ.


Click it and Unblock the Notifications











