twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்தியூர் சந்தையைக் கலக்கும் 'சூர்யா குதிரை'!

    By Shankar
    |

    ஈரோடு: அந்தியூரில் பிரபலமான குதிரைச்சந்தை நேற்று தொடங்கியது. இந்த சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள ஒரு குதிரைக்கு ரூ 5 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் குதிரை நடிகர் சூர்யாவுடன் ஏழாம் அறிவு படத்தில் நடித்தது.

    ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்துள்ள புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் குதிரை சந்தை நடத்தப்பட்டு வருகிறது. மைசூர் மன்னர் திப்பு சுல்தான் காலத்திலேயே புகழ்பெற்ற சந்தை இது.

    நேற்று தொடங்கிய இந்த சந்தையில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, நாமக்கல் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குதிரைகள் விற்பனைக்கு வந்தன.

    உயர்ந்த ரக குதிரைகளான கத்தியவார், மார்வார் குதிரைகளும், வண்டி ஓட்டவும், சரக்கு இழுக்கவும் பயன்படும் சாதாரண ரக குதிரைகளும் சந்தையில் ஏராளமாக கொண்டு வரப்பட்டு உள்ளன. உயர்ந்த ரகத்தை சேர்ந்த குதிரைகள் மட்டும் 300-க்கும் மேற்பட்டவை வந்துள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான குதிரைகளும், மாடுகளும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளன.

    சூர்யாவுடன் நடித்த குதிரை

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த இளங்கோ என்பவர் 4 குதிரைகள் விற்பனைக்கு கொண்டு வந்து உள்ளார். இதில் ஒரு குதிரை மார்வார் இனத்தை சேர்ந்தது. முழுமையாக கறுப்பு நிறம் கொண்ட இந்த உயர்ந்த ரக குதிரை சமீபத்தில் நடிகர் சூர்யாவுடன் 7-ம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த குதிரை பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டு உள்ளது. மார்வார் இன குதிரைகள் இந்த ஆண்டு குறைவாகவே வந்துள்ளன. அதில் கம்பீரமாக காட்சி அளிக்கும் இந்த கறுப்பு குதிரையை சந்தைக்கு வந்த அனைவரும் ஆர்வமாக வந்து பார்த்துச்செல்கின்றனர். 6 வயதான இந்த ஆண் குதிரைக்கு அதன் உரிமையாளர் ரூ.5 லட்சம் விலையை நிர்ணயித்துள்ளார்.

    இதேபோல, போனி குதிரைகள், நோக்ரா குதிரைகள் போன்றவையும் விற்பனைக்கு வந்துள்ளன.

    குதிரைகள் மட்டுமின்றி காங்கயம் இன மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. காங்கயம் மாடுகள் ஒரு ஜோடி ரூ.80 ஆயிரம் வரையிலும், ஓங்கோல் இன மாடுகள் ஒரு ஜோடி ரூ.1.5 லட்சம் வரையிலும் விலைக்குப் போகின்றன.

    செல்லப்பிராணியான பூனைகளும் இந்த சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பெர்சியன் கேர் இனத்தை சேர்ந்த ஒரு பூனை ரூ.15 ஆயிரம் விலை வைக்கப்பட்டு உள்ளது.

    இதுதவிர 4 கொம்புகளை கொண்ட செம்மறி ஆடு, 6 கால்கள் கொண்ட வெள்ளாடு, கட்டுச்சேவல் என விதவிதமான கால்நடைகளும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. குதிரை சந்தை ஆகஸ்ட் 13-ந் தேதி வரை நடக்கிறது.

    English summary
    The famous horse fair has began yesterday at Anthiyur, Erode district. The attraction of the fair is an horse worth Rs 5 lakhs. It has played an important role with actor Surya in 7-Aum Arivu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X