twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'சவடால் ஹீரோக்கள்' - பாக்யராஜ் பாய்ச்சல்!

    By Staff
    |

    Bagyaraj with family
    இன்றைய ஹீரோக்கள் வெறும் வாய்ச் சவடால் வீரர்கள். திரையில் பத்துப் பேரை அடித்து வீழ்த்தும் அவர்கள் நிஜத்தில் எந்த சோதனை முயற்சியிலும் பங்கெடுக்கும் திராணியற்றவர்கள் என்று பாய்ந்துள்ளார் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ்.

    பாக்யராஜின் ஒரே மகன் சாந்தனு முதல்முறையாகக் கதாநாயகனாக நடித்துள்ள, சக்கரகட்டி எனும் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் வளாகத்தில் நடந்தது.

    தமிழ்த் திரையுலகின் முன்னணி படைப்பாளிகள் மற்றும் நடிகர்கள் பங்கேற்ற இந்த விழாவில் இரு பாடல்கள் திரையிட்டுக் காட்டப்பட்டன. இளமை ததும்பும் வண்ணமயமான அந்தப் பாடல்கள் பார்வையாளர்களின் பெருத்த கரவொலியைப் பரிசாகப் பெற்றன.

    கலைப்புலி தாணு தயாரிப்பில், அவரது மகன் கலாபிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். ரஜினி மகள் சௌந்தர்யா கிராபிக்ஸ் காட்சிகளை அமைத்துள்ளார்.

    பாடல்களின் முதல் சிடியை ராம. நாராயணன் வெளியிட ஏஆர் ரஹ்மானின் தாயார் கதீஜாவும் சாந்தனுவின் தாயார் பூர்ணிமா பாக்கியராஜூம் பெற்றுக் கொண்டனர்.

    சாந்தனுவும், கலாபிரபுவும் எந்தக் காட்சியும் புதுமுகம் என்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. தேர்ந்த அனுபவசாலிகள் மாதிரி இப்படத்தை இயக்கியுள்ளனர் என்றார் வாழ்த்திப் பேசிய பாலச்சந்தர்.

    பாக்யராஜை விட பிரமாதமாக வருவார் சாந்தனு என பாரதிராஜா வாழ்த்தினார்.

    இறுதியாக மைக் பிடித்த பாக்யராஜ், ஹீரோக்கள் மீதான தனது கோபங்களை கொட்டித் தீர்த்துவிட்டார்.

    அவர் பேச்சிலிருந்து...

    என் மகன் இப்போதே என் கட்டுப்பாட்டிலிருந்து மெல்ல வெளியேறுவது எனக்குப் புரிகிறது. நானும் அவனை இந்தப் படம் செய், இதைச் செய்யாதே என தேவையில்லாமல் அட்வைஸ் பண்ணிக் கொண்டிருக்கப் போவதில்லை. ஆனால் அவனுக்கு நான் வைக்கும் கோரிக்கை இது.

    எந்தக் காரணத்தைக் கொண்டும் உதவி இயக்குநர்களை அலட்சியப்படுத்தாதே. அவர்களிடம்தான் நாளைய சினிமா இருக்கிறது.

    நீ வாழ்க்கையில் உயரும்போது உன்னோடு சேர்த்து ஒரு நான்கு புதிய இயக்குநர்களையும் கைதூக்கிவிடு.

    இன்றைக்கு சில ஹீரோக்கள் குறைந்தபட்சம் மூன்று படங்களாவது இயக்கிய டைரக்டர்களுக்குத்தான் படம் பண்ணுவோம் என்றெல்லாம் நிபந்தனை விதிக்கிறார்கள். இது உண்மையிலேயே மனசுக்கு வருத்தமாக உள்ளது.

    இதே மாதிரி இயக்குநர்கள் பாலச்சந்தரும், பாரதிராஜாவும் நினைத்திருந்தால் இன்று இந்திய சினிமாவை ஆளும் ரஜினியும், கமலும் இருந்திருப்பார்களா...

    யாரும் வரும்போதே பெரிய நடிகர்களாக வருவதில்லை. ஒரு இயக்குநர் வெளியில் வரும்போதே பெரிய படைப்பாளியா இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்ளமுடியும்? ஒரு படமாவது வந்தால்தானே... அந்த ஒரு படத்துக்கே வாய்ப்பை மறுத்தால், பாவம் அந்த புது இயக்குநரின் கதி என்ன ஆவது?

    யோசித்துப் பாருங்கள்... இன்று விக்ரம் என்ற மிகச் சிறந்த நடிகர் தேசிய விருதெல்லாம் வாங்கினாரென்றால் எப்படி.... மந்திர மாயம் செய்தா... இல்லை. பாலா என்ற புதுமுக இயக்குநர்தான், பத்தாண்டுகாலம் வாய்ப்புகள் ஏதுமின்றி முடங்கிக் கிடந்த விக்ரமை அழைத்து வந்து கை தூக்கி உச்சாணிக்கு ஏற்றிவிட்டவர்.

    புதிய வார்ப்புகள் படம் பண்ணும் போது, என்னை நாயகனாகப் போட்டதற்காக, எங்கள் இயக்குநர் பாரதிராஜாவை மெண்டல் என்றே சொன்னார்கள். ஆனால் அவர் என்னை பெரிய நடிகனாக்கினார். ஒரு படைப்பாளியாக இருபத்தி எட்டு ஆண்டுகள் இங்கே நான் நிலைத்திருக்க காரணம் அவர்தான்.

    இதையெல்லாம் ஹீரோக்கள் மறந்துவிடுகிறார்களே...

    ஹீரோக்கள் 5 தோல்விப் படங்களைக் கொடுத்தாலும், ஒரேயொரு வெற்றிப் படம் கொடுத்து தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் இயக்குநர்கள் அப்படியா... ஒரு படம் விழுந்தா அடுத்த நாள் கதவைத் தட்டக் கூட ஆளில்லை. கைய ஊனி கரணம் போட்டு நாங்களே எழுந்திரிச்சாதான் உண்டு.

    திரையில்தான் இவர்கள் ஹீரோக்கள். பத்துப்பேரை அடிச்சு சாகஸம் செய்கிறார்கள். ஆனால் நிஜத்தில், ஒரு புதுமுக இயக்குநரின் படத்தில் நடிக்கும் அளவுக்குக் கூட ரிஸ்க் எடுக்க பயப்படுகிறார்கள்.

    இந்தப் படத்தில் கதாநாயகனும் புதுசு. இயக்குநரும் புதுசு. அந்த இருவருக்கும் முதுகெலும்பா இருந்து பெரிய ஆதரவைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்,ரஹ்மான். அவரைப் பாராட்டுகிறேன் என்றார்.

    இயக்குநர்கள் ராமநாராயணன், கேஎஸ் ரவிக்குமார், விக்ரமன், தரணி, ராஜா, அமீர், நடிக்ரகள் ஜெயம்ரவி, சிபிராஜ் உள்பட பலர் வாழ்த்திப் பேசினர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X