'சேவல்' பரத்துடன் இணையும் சிம்ரன்!

ஹீரோவுக்கு ஜோடி இல்லையென்றாலும், அவருக்கு கொஞ்சமும் சளைக்காத வேடமாம் இது. தாமிரபரணியில் நதியாவின் வேடம் எப்படி சஸ்பென்ஸாக வைக்கப்படிருந்ததோ அப்படித்தான் இதில் சிம்ரனின் வேடமும் என்கிறார் இயக்குநர் ஹரி.
பரத்-பூனம் பஜ்வா நடிக்கும் சேவலின் துவக்க விழா நேற்று காலை விஜயா கார்டனில் உள்ள பி.என்.நாகிரெட்டி அரங்கில் பூஜையுடன் தொடங்கியது. பிரபல விநியோகஸ்தர் எம்.ஏ.ஜின்னா தனது ஜின்னா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் முதல் படம் இது.
படம் குறித்து இயக்குனர் ஹரி கூறியதாவது: ஹீரோ பரத்துக்கு இணையாக சிம்ரனுக்கும் இதில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஹீரோயினாக பூனம் பஜ்வா நடிக்கிறார்.
ஒருவிதத்தில் சிம்ரனுக்கு இது ரீஎன்ட்ரி படம். அவருக்கு அக்கா, அண்ணி கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக மீடியாக்கள் கூறிவருகின்றன. ஆனால் அப்படிச் சொல்ல முடியாது. இந்தப் படத்தில் சிம்ரனின் ரோல் என்னவென்பதை சற்று சுவாரஸ்மாக இருக்கட்டுமே என ரகசியமாக வைத்திருக்கிறோம்.
படத்தின் முதல் பாதியில் பரத்- வடிவேலு கூட்டணி அதகளம் பண்ணப் போகிறது. இப்படிக்கூட செய்வார்களா என்று ரசிகர்கள் விழுந்துவிழுந்து சிரிக்கும் அளவுக்கு வடிவேலுவின் அட்டகாசம் இருக்கும். அவர் இதில் தபால்காரராக வருகிறார். இடைவேளைக்குப் பிறகு கலங்க வைக்கும் சென்டிமென்ட், அதிரடி சண்டை என இளைஞர்களின் ரசனைக்குத் தீனி போடும் வகையில் கதை போகிறது.
மற்றொரு முக்கிய அம்சம், முதல் முறையாக இந்தப் படம் முழுக்க பாத்திரங்கள் நெல்லைத் தமிழைப் பேசுவதுபோல அமைத்திருக்கிறேன். நான் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான். ஆனால் இதுவரை எந்த படத்திலும் அந்த வட்டார வழக்கை முழுமையாகப் பயன்படுத்தியதில்லை... என்றார் உற்சாகமாக.
முன்னதாக நடந்த படபூஜையில் ஏவி.எம். சரவணன், ராம நாராயணன், கே.பாலசந்தர், பேரரசு, ஆர்.பி.சௌத்ரி, எஸ்.ஏ.சந்திரசேகர், அஜய்குமார், விஜயகுமார், மஞ்சுளா, மோனிகா, நா.முத்துக்குமார், அருண் விஜய், கஞ்சா கருப்பு உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். பரத்தும், ஹரியும் கோட் சூட் கெட்டப்பில் அனைவரையும் வரவேற்றனர்.


Click it and Unblock the Notifications











