நடிகர் சங்க நாடக விழா: ரஜினி பங்கேற்கிறார்!

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் தியாகராய நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர்கள் விஜயகுமார், மனோரமா, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
ஆகஸ்டு 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 'நினைவலைகள்' என்ற பெயரில் நாடக விழா நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அசோகன், வியட்நாம் வீடு, ரத்தக் கண்ணீர் உள்பட பிரபல நாடகங்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாடகத்திலும் முன்னணி நடிகர்கள் பங்கேற்று நடிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கடைசி நாளில் சரத்குமார், ராதாரவி, விஜயகுமார் ஆகியோர் நடிக்கின்றனர்.
நாடக நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க ரஜினி ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதை அதிகாரப்பூர்வமாக நடிகர் சங்கத் தலைவர் சரத் குமார் உறுதி செய்துள்ளார். நாடகத்தில் சில காட்சிகளில் ரஜினி தோன்றி ஆச்சர்யம் தரவிருக்கிறார்.
நாடகங்களில் நடிப்பது குறித்து ஏற்கெனவே பலமுறை ரஜினி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாடகங்களை ஊக்குவிக்கவே இதை ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழுவில் சூர்யா, ஸ்ரீகாந்த், பூச்சி முருகன், நம்பிராஜன், கே. ராஜன், நந்தகுமார், டி.என். கிருஷ்ணன், சுவாதி, பாத்திமா பாபு ஆகியோர் நடிகர் சங்கத்தின் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
நடிகர் சங்க தலைவர் சரத்குமார் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ராம.நாராயணன், காஜா மைதீன், சிவசக்தி பாண்டியன், எஸ்.ஏ. சந்திரசேகர், பெப்சி சார்பில் வி.சி. குகநாதன், சிவா, விநியோகஸ்தர் சங்கம் சார்பில் கலைப்புலி சேகரன், பாபுராவ் ஆகியோர் நேரில் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பி.ஆர்.ஓ. யூனியன் சார்பில் விஜயமுரளி, பெருதுளசி பழனிவேல், சிங்காரவேலு, வி.கே.சுந்தர் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர்கள் சத்யராஜ், முரளி, பாக்யராஜ், எஸ்.வி. சேகர், சுந்தர்.சி, சார்லி, அலெக்ஸ், மயில்சாமி, ராம்கி, குமரிமுத்து, நடிகைகள் மும்தாஜ், அம்பிகா, பசி சத்யா, குயிலி, சி.ஐ.டி. சகுந்தலா, சத்யபிரியா, நிரோஷா, தாரிகா மற்றும் கே. ராஜன், ஜே.என். காளை, ஜே.ஆர். செல்வராஜ் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











