மகாதீரா... வியந்த ரஜினி!

இந்தப் படம் மிகப் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது ஆந்திராவில். முதல்வார வசூல் மட்டுமே ரூ.22 கோடி!
கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று மகாதீராவின் சிறப்புக் காட்சியை தனது நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சென்னை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் போட்டுக் காண்பித்தார் சிரஞ்சீவி.
படம் பார்த்த ரஜினி, படத்தின் நாயகன் ராம் சரணை அழைத்துப் பாராட்டியுள்ளார். சிரஞ்சீவியிடமும் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தாராம்.
இதுகுறித்து ரஜினி கூறுகையில்,
"ராம் சரண் நடித்த மகா தீரா படம் பார்த்தேன். மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அவரது முதல்படம் 'சிறுத்த' பார்த்த போதே, ராம் ஒரு மிகப் பெரிய ஸ்டாராக வருவார் என்று கணித்தேன். மீடியாவுக்கும் சொன்னேன். என்னுடைய அந்த கணிப்பு மெய்யானதை நினைத்து மிகுந்த சந்தோஷப்படுகிறேன். மகாதீரா படம் வசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்", என்றார்.
ரஜினி படம் பார்த்த அடுத்த நாள் இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தைப் பார்த்துள்ளார்.
பிரமாண்டம், சிறந்த நடிப்பு இரண்டும் ஒருங்கே அமையப்பெற்ற படம் இது என அவர் பாராட்டியுள்ளார்.
மகாதீரா படம் சரித்திர கதையாகத் துவங்கி, முன்பிறவிக் கதையாக முடிகிறது. தமிழில் இந்தப் படத்தைத் தயாரித்தால் வித்தியாசமாக இருக்கும் என எண்ணத்தில் இந்தப் படத்தை வாங்க போட்டி போடுகிறார்களாம் முன்னணி நடிகர்கள்.


Click it and Unblock the Notifications











