கோலிவுட்டுக்கு மூணு நாள் லீவு!

இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன், இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
'தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் சென்னையில், அகில இந்திய திரைப்பட தொழிலாளர்களின் மாநாடு நடைபெற இருக்கிறது. 36 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருக்கிற இந்த மாநாடு, அக்டோபர் 9, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும்.
முதல் நாள் மாநாடு, சென்னை நேரு ஸ்டேடியத்தில் தொடங்க இருக்கிறது. விழா குழு தலைவர் கே.பாலசந்தர் தலைமையிலும், 'பெப்சி' தலைவர் வி.சி.குகநாதன் முன்னிலையிலும் மாநாடு நடைபெறும். இம் மாநாட்டை துவக்கி வைக்க முதல்வர் கருணாநிதியை அழைத்துள்ளோம்.
அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனங்களை சேர்ந்த சங்க பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள். திரைப்பட தொழிலாளர்கள் இடையே சுமூக உறவை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது.
முதல் நாள் மாநாட்டில் திரைப்பட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைகள், வேலை நேரம் ஆகியவை பற்றி விவாதிக்கப்படும். அன்று மாலை 5 மணி முதல் 10 மணி வரை, முதல்வர் முன்னிலையில், நடிகர்-நடிகைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
இரண்டாவது நாள் மாநாடு, சென்னை நந்தம்பாக்கம் வணிக வளாகத்தில் வரவேற்பு நிகழ்ச்சியுடன் தொடங்கும். இதில் திரைப்பட துறையின் எதிர்காலம் குறித்து பல திட்டங்கள் விவாதிக்கப்படும்.
மூன்றாவது நாள் மாநாட்டில், அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கான புதிய நிர்வாகிகள் தேர்தலும், பதவி ஏற்பும் நடைபெறும்.
இந்த மாநாட்டில், சுமார் 30 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள். மாநாட்டுக்கான செலவு ரூ.50 லட்சம். மாநாட்டின் மூலம் வசூலாகும் தொகையில், திரைப்பட தொழிலாளர்களுக்காக ஒரு புதிய மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடம் கட்டப்படும்.
3 நாள் விடுமுறை
மாநாடு நடைபெறும் 3 நாட்களும் (அக்டோபர் 9, 10, 11) படப்பிடிப்புகளும், படப்பிடிப்பு சார்ந்த எந்த வேலைகளும் நடைபெறாது என்றனர்.


Click it and Unblock the Notifications











