twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மிஸ் சின்னத்திரை-2008: நடிகை ரியா தேர்வு

    By Staff
    |

    Riya won Miss Chinnathirai-2008
    சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் திறமை காட்டிவரும் இளம் நடிகைகளில் பலவகையிலும் சிறந்து விளங்குபவர்களை அடையாளம் காட்டுவதற்காக, சின்னத் திரை நடிகர் விஷ்வா உருவாக்கிய நிகழ்ச்சிதான் மிஸ் சின்னத்திரைப் போட்டி.

    கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஆண்டு தோறும் இப்போட்டியை நடத்துவதாக அறிவித்திருந்தார் விஷ்வா.

    அதன்படி 2008-ம் ஆண்டுக்கான மிஸ் சின்னத்திரைப் போட்டி சென்னை லாமிக்கேல் கிளப்பில் 11ம் தேதி இரவு நடந்தது. கண்கவரும் நடன நிகழ்ச்சிகளுடன் துவங்கிய இப்போடியில் சின்னத்திரையில் பிரபலமாகத் திகழும் மது, ஆர்த்தி, தாரிகா, ஸ்வேதா, தீபா, ஜூலி, ரியா, அனிஷா, காவ்யா மற்றும் அபர்ணா ஆகிய பத்து நடிகைகள் போட்டியாளர்களாகப் பங்கேற்றனர்.

    இதில் நடுவர்களாக பிரபல நடிகைகள் சங்கீதா, அஞ்சலி, இயக்குநர்கள் மாதேஷ், கோலங்கள் திருச்செல்வம், கடந்த ஆண்டு மிஸ் சின்னத்திரை பட்டம் வென்ற சந்தோஷி மற்றும் மாடல் அழகி காவ்யா ஆகியோர் பங்கேற்றனர்.

    முதல் சுற்று புடவை அணிந்த அழகிகளின் அணிவகுப்பு நடந்தது. பின்னர் தனித் திறமைச் சுற்று நடைபெற்றது. இதில் அழகிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த ஆடல், பாடல் மற்றும் இதர திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் ஒரு தேர்ந்த காராத்தே வீரரைப்போல நடிகை தாரிகா சிமெண்ட் பலகைகளை உடைத்து பரபரப்பேற்படுத்தினார். மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றுகளில் மேற்கத்திய நாகரிக உடையணிந்து நடைபோட்டனர்.

    இறுதியில் நடிகைகளின் அறிவுத் திறனைச் சோதிக்கும் சுற்று. இதில் நடுவராக வந்திருந்த இயக்குநர் மாதேஷ் அனைத்து போட்டியாளர்களுக்கும் பொதுவான ஒரு கேள்வியை முன் வைத்தார். 'பெண்மையின் இலக்கணம் என்ன?" என்ற அவரது கேள்விக்கு பத்துபேரும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக, அடக்கம், பொறுமை, தாய்மை, நாணம்(!), காதலில் உறுதி என்று சொல்லிவைத்த மாதிரி பதில் கூறினர்.

    இறுதியில் மிஸ் சின்னத்திரை 2008-ஆக ரியா தேர்வு செய்யப்பட்டார். தாரிகா இரண்டாமிடத்தையும், அனிஷா மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

    மேலும் தாரிகாவுக்கு மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட அழகி எனும் விருதும் வழங்கப்பட்டது. இதைத் தவிர நடிகை மதுவுக்கு சிறந்த உடல் அழகி பட்டமும், ஸ்வேதாவுக்கு சிறந்த கண்ணழகி விருதும், தீபாவுக்கு சிறந்த பூனைநடை (அதாங்க கேட்வாக்!) அழகி விருதும், ஜூலிக்கு சிறந்த சரும அழகி விருதும், காவ்யாவுக்கு சிறந்த சிரிப்பழகி விருதும் வழங்கப்பட்டது.

    விஜய் ஆதிராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விதம் சிறப்பாக இருந்தது. பிரபல பின்னணிப் பாடகி மஹதி, நடிகைகள் ப்ரியதர்ஷினி, நீபா, டிங்கு ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். விஷன்ப்ரோ ஈவன்ட் மேனேஜ்மெண்ட் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X