22ம் தேதி வைரமுத்து மகன் திருமணம்

வைரமுத்து-பொன்மணி தம்பதியின் மூத்த மகன், மதன் கார்க்கி. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்து, பி.எச்.டியையும் முடித்துள்ளார். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
மதன் கார்க்கிக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணமகள் நந்தினி சென்னை டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
நந்தினியின் தந்தை ஈஸ்வரமூர்த்தி பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாயார் ஜெயம்மாள், தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர்.
மதன் கார்க்கி-நந்தினி திருமணம் வருகிற 22ம் தேதி காலை 9-30 மணிக்கு, கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் நடக்கிறது.
முதல்வர் கருணாநிதி திருமணத்திற்குத் தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.
நிகழ்ச்சியில், வைரமுத்துவின் கேள்வி-பதில் தொகுப்பான பாற்கடல்' புத்தகம் வெளியிடப்படுகிறது. அந்த புத்தகத்தை கருணாநிதி வெளியிடுகிறார். அவரிடம் இருந்து புத்தகத்தின் முதல் பிரதியை மணமகள் நந்தினி பெற்றுக் கொள்கிறார்.
மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர், இலக்கியத் துறையினர் இதில் கலந்து கொள்கின்றனர்.
திருமணத்தை நடத்துவதற்காக ஒரு விழாக் குழுவையும் வைரமுத்து அமைத்துள்ளார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.எஸ்.பழனிச்சாமி, இயக்குநர் பாரதிராஜா, கனிமொழி எம்.பி, வழக்கறிஞர் நளினி சிதம்பரம், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், பழனி ஜி.பெரியசாமி, மதிவதனன் ஐ.ஏ.எஸ், ரவி ஐ.பி.எஸ், வசந்தபவன் அதிபர் ரவி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் முரளி ஆகியோர் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
வைரமுத்து குடும்பத்துடன் இணைந்து இந்தக் குழுவினரும் திருமண ஏற்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











