ஆபாச நடிப்பு: பானு அப்பா புகார்

மகள் பானுவை ஆபாசமாக நடிக்க அனுமதிக்கக் கூடாது எனக் கூறியதால் தன்னை மனைவி சித்திரவதை செய்வதாக புகார் தெரிவித்துள்ளார் நடிகை பானுவின் தந்தை ஜார்ஜ்.
தாமிரபரணி படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை பானு. ஏராளமான மலையாளப் படங்களில் முக்தா என்ற பெயரில் நடித்து வருகிறார். இவரது தந்தை ஜார்ஜ் திடீரென்று கொச்சியில் நிருபர்களைச் சந்தித்தார்:
அவர் கூறியதாவது:
எனக்கு முக்தா (பானு) உள்பட இரு மகள்கள் உள்ளனர். 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே அச்சன் உறங்காத வீடு படத்தில் நாயகியாக நடித்துப் புகழ் பெற்றார் என் மகள். ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. என் மனைவியின் பிடிவாதத்துக்காக அனுமதித்தேன்.
ஆனால் தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கில் வந்த வாய்ப்புகளையெல்லாம் ஒப்புக் கொள்ள வைத்து ஆபாசமாக நடிக்க வைத்தார் என் மகள் பானுவை. இதைத் தட்டிக் கேட்டதால் என் வீட்டில் தகராறு. என்னையே துன்புறுத்த ஆரம்பித்துவிட்டாள் என் மனைவி ஷாலி.
என் குடும்ப சந்தோஷமே மகள் பானு நடிக்க வந்ததால் தொலைந்து போய்விட்டது. பணத்தைக் கண்டதும் என் மனைவிக்கு நான் தேவையில்லாமல் போய்விட்டேன். எர்ணாகுளத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் என் மீது பல பொய் வழக்குகள் போட வைத்துள்ளாள் ஷீலா.
நான் பெற்ற மகள் பானுவை உடல் ரீதியாக துன்புறுத்துவதாக என் மனைவி என்மேல் பொய்ப் புகார் கொடுத்து மிரட்டி வருகிறாள். போலீசும் அவளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. 10 நாட்கள் தலைமறைவாகக் கூட இருந்தேன்.
பணம், சொகுசு வாழ்க்கைக்காக மகளை அடகு வைக்கும் என் மனைவியிடமிருந்து என்னையும் பானுவையும் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்றுதான் புரியவில்லை எனக் கண்ணீர் விட்டார் ஜார்ஜ்.


Click it and Unblock the Notifications











