சீட்டுக்கு 10 கோடி கேட்டார் சிரஞ்சீவி! - கவிதா பகீர்

தமிழ், தெலுங்கு படங்களில் நாயகியாகவும், பின்னர் 'ஆன்ட்டி'யாகவும் நடித்துப் பிரபலமானவர் நடிகை கவிதா. இவரது சொந்த மாநிலம் ஆந்திரா.
சில மாதங்களுக்கு முன்புதான் இவர் தன்னை சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தெலுங்கு தேசத்தில் இணைத்துக் கொண்டார்.
இப்போது ஆந்திராவெங்கும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்களுக்காக சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார் கவிதா. இவருக்கும் எக்கச்சக்க கூட்டம் கூடுகிறது.
விஜய நகரம் மாவட்டம் பொப்பிலி சட்டப்பேரவையில் போட்டியிடும் தெலுங்கு தேசம் வேட்பாளர் லட்சுமி நாயுடுவை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:
பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் லட்சணம் என்னவென்று தெரிந்த பின்னர்தான் நான் அந்தக் கட்சிக்குப் போகாமல் விட்டுவிட்டேன். அந்தக் கட்சித் தலைவர் சிரஞ்சீவி, என்னை தனது கட்சியில் சேரும்படி அழைத்தார்.
ஆனால் தேர்தலில் சீட்டு வேண்டும் என்றால் குறைந்தது ரூ.10 கோடியாவது தர வேண்டும் என்று என்னிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார்.
அதேபோல ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியும் என்னை அழைத்தார். காங்கிரஸில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டால் கோடிகோடியாக சம்பாதிக்கலாம் என்றார். ஆனால் நான் அதற்கெல்லாம் மயங்கவில்லை.
அப்போதுதான் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு என்னை மக்கள் சேவை செய்ய அழைத்தார். உடனே ஒப்புக் கொண்டு சேர்ந்துவிட்டேன்.
மற்ற கட்சிகளுக்கும், தெலுங்கு தேசத்துக்கும் உள்ள வித்தியாசம் எனக்குத் தெரிந்தது போலவே உங்களுக்கும் தெரியும் என நம்புகிறேன் என்றார் கவிதா.


Click it and Unblock the Notifications











