இந்தியாவின் ஆஸ்கர் விருது கனவை நனவாக்கியதில் மகிழ்ச்சி - மேகான்

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் இந்தியா வென்ற ஆஸ்கர் விருதுகளில் ஸ்மைல் பிங்கி டாக்குமென்டரியும் ஒன்று. 39 நிமிடம் ஓடக் கூடிய இந்த டாக்குமென்டரி, வாரணாசியைச் சேர்ந்த பிங்கி சோங்கார் என்ற 8 வயது சிறுமி குறித்ததாகும்.
உதட்டுப் பிளவுடன் இருந்து வந்த பிங்கியின் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைத்தார் டாக்டர் சுபோத் குமார். கிராமமே பிங்கியைப் பார்த்துக் கேலி செய்து கொண்டிருந்தபோது ஒரே ஒரு அறுவைச் சிகிச்சை மூலம் பிங்கியை அழகான தேவதையாக மாற்றியவர் சுபோத் குமார்.
இதைக் கேள்விப்பட்ட மேகான் மைலான், அதை அப்படியே டாக்குமென்டரியாக்கினார். ஸ்மைல் பிங்கி என்ற பெயரில் உருவான இந்த குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றது.
ஆஸ்கர் விருது பெற்ற பின்னர் முதல் முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளார் மேகான். ஸ்மைல் பிங்கி குறித்தும், ஆஸ்கர் குறித்தும் அவர் கூறுகையில்,
இந்தக் கதை என்னை வெகுவாக கவர்ந்தது. இதற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். குறிப்பாக இந்தியாவுக்கு ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தர வேண்டும் என்று விரும்பினேன். அதன்படியே நடந்தது மகிழ்ச்சி தருகிறது.
அழகான சிறுமி பிங்கியின் முகத்தில் தெரிந்த சந்தோஷம் உலகம் முழுவதும் பரவ வேண்டும், இந்திய டாக்டர் குமார் செய்த சாதனை அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று விரும்பியே இந்த டாக்குமென்டரியை இயக்கினேன் என்கிறார் மேகான்.


Click it and Unblock the Notifications











