தமிழில் மட்டுமே பெயர் வைப்போம்! - கருணாநிதியிடம் தயாரிப்பாளர்கள் உறுதி
இனிமேல் வெளியாகிற எல்லா திரைப் படங்களுக்கும் தமிழில் மட்டுமே பெயர் வைப்போம் என்று, முதல்வர் கருணாநிதியிடம் தமிழ் திரைப்பட சீரமைப்பு குழுவினர் உறுதி அளித்தனர்.
தமிழ் திரைப் படங்களுக்கு கேளிக்கை வரியை தி.மு.க. அரசு முழுமையாக ரத்து செய்த காரணத்தால், தங்களுக்கு வந்து கொண்டிருந்த வரி வருவாய் குறைந்து விட்டதாக உள்ளாட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் அரசிடம் முறையிட்டனர்.
வெளிப்புறப் படப்பிடிப்புக்கான கட்டணங்களும் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குறைக்கப்பட்டுள்ளது. இப்படி திரைப்படத் துறைக்குச் செய்யப்பட்ட பல்வேறு சலுகைககள் பொது மக்களுக்குச் சென்று சேராததால், இவற்றை ரத்து செய்தால் என்ன என்ற மனநிலைக்கு வந்த கருணாநிதி, இவற்றை மறுசீரமைப்பு செய்து பரிந்துரைக்க ஒரு குழுவை நியமித்தார்.
இதன்படி, திரைப்படங்கள், திரை அரங்குகள், கேளிக்கை வரி விதிப்பு, வெளிப்புற படப்பிடிப்புக்கான கட்டணங்கள், ஏனைய முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்ய ஏவி.எம். சரவணன், அபிராமி ராமநாதன், கோவை மேயர் வெங்கடாச்சலம், ஆலந்தூர் முன்னாள் நகர் மன்றத் தலைவர் ஆர்.எஸ்.பாரதி, உள்துறை செயலாளர் மாலதி, வணிகவரித்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், செய்தித்துறை செயலாளர் முத்துசாமி ஆகியோரைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு, திரைப்படத் துறையினர், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்து பேசி விவாதித்து அரசுக்குப் பரிந்துரைகளை அளிக்கும்.
இந்தநிலையில் இந்த குழுவின் முதல் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில், தமிழ் திரைப் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கப்படாதது பற்றியும், ஏதோ ஒப்புக்கு மட்டுமே இதை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தொடர்வதாகவும் முதல்வர் கேள்வி எழுப்ப, ஆடிப்போன தயாரிப்பாளர்கள், அந்த சலுகையைப் பறிக்க வேண்டாம் என வேண்டிக் கொண்டனர்.
இதுகுறித்து பின்னர் குழுவின் முக்கிய உறுப்பினரான அபிராமி ராமநாதன் கூறியதாவது:
இன்றைய கூட்டத்தில் தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப் படங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் திட்டத்தின் கீழ் சலுகை பெறுவதற்காக, பிறமொழி கலப்பில் பெயரிடப்பட்ட படங்கள் சார்பிலும் மனு செய்யப்படுகின்றன.
தமிழில் பெயரிடப்படும் படங்களுக்கு மட்டுமே இச்சலுகை என்று அரசு அறிவித்திருந்தும் சலுகை கோரி இதுபோன்ற மனுக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
தமிழ் மொழி வளரவேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த சலுகையை அறிவித்தோம். அதற்கு மாறாக, தமிழில் பெயரிடப்படாத படங்கள் சார்பிலும் சலுகை கோரி மனு செய்யப்படுகின்றன. எனவே, இந்த சலுகையை அறவே ரத்து செய்தால் என்ன என்று எண்ணுவதாக முதல்வர் கூறினார்.
நாங்கள் இனி எல்லா திரைப்படங்களுக்கும் தமிழிலேயே பெயர் வைப்பதாக முதவருக்கு உறுதியளித்துள்ளோம். அதனை ஏற்று, தமிழில் பெயர் வைக்கப்படும் தமிழ் திரைப் படங்களுக்கு மட்டும் வரிச்சலுகை அளிப்பது நீட்டிக்கப்படும் என்று முதல்வர் பெருந்தன்மையுடன் உறுதியளித்துள்ளார், என்றார்.


Click it and Unblock the Notifications











