twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஈழத் தமிழர் குழந்தைகளுக்கு சிவக்குமார் கல்வி உதவி

    By Staff
    |

    Sivakumar
    இலங்கையில் வாழ்வைத் தொலைத்துவிட்டு, தமிழகத்தின் அகதி முகாம்களில் துன்பப் படும் ஈழத் தமிழர்களின் குழந்தைகளில் சிலருக்கு இந்த ஆண்டு முதல் கல்வி உதவி வழங்குவதை கடமையாகக் கொண்டுள்ளோம், என நடிகர் சிவகுமார் அறிவித்துள்ளார்.

    நடிகர் சிவகுமார், தனது 'சிவகுமார் கல்வி அறக்கட்டளை' மூலம் கடந்த 30 ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத் தொகைகள் மற்றும் கல்வி உதவித் தொகைகளை வழங்கி வருகிறார்.

    இந்த முறை 30வது ஆண்டாக பரிசளிக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார், அவர்களது மகன்களான நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் 30 மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டது. மேலும் கல்வி மேம்பாட்டுக்காக இயங்கும் சில நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து ரூ.6 லட்சம் உதவித் தொகை வழங்கினார் சிவகுமார்.

    நிகழ்ச்சியில் சிவகுமார் பேசியதாவது:

    இந்த சிவகுமார் அறக்கட்டளை 1979-ம் ஆண்டு துவங்கப்பட்டது. 25 ஆண்டுகள் நான் அந்த அறக்கட்டளையை நடத்தி என்னால் முடிந்த அளவு சிறப்பாக பணிகள் செய்தேன். பின்னர் என் மகன் சூர்யா அந்தப் பணியை ஏற்றுக் கொண்டு, என்னைவிட சிறப்பாகச் செய்து வருகிறார்.

    அவர்தான் உதவித் தொகையை ரூ.10000-ஆக உயர்த்தினார். ஆண்டுதோறும் உதவி பெறும் மாணவர் எண்ணிக்கையையும் உயர்த்தி வருகிறார்.

    நான் மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன். ஒரு வேளை மட்டுமே நல்ல சாப்பாடு கிடைக்கும். கஷ்டப்பட்டு படித்ததால், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்து வருகிறேன்.

    மாணவர்கள், தங்களுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும். அதுபோல தாய்நாடு மற்றும் தாய்மொழி மீது பற்றுக்கொண்டிருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

    இலங்கையில் போர் முடிந்த பிறகாவது நிம்மதி ஏற்படும் என்று பார்த்தால், அங்கு உணவு மற்றும் மருந்துகள் கிடைக்காத நிலை இருக்கிறது.

    இலங்கையில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் துன்பப்படுகிற ஈழத் தமிழர்கள் பிள்ளைகளில் சிலருக்கு இந்த ஆண்டு முதல் உதவி வழங்க முடிவு செய்துள்ளோம்..., என்றார்.

    சூர்யா பேசுகையில், சிவகுமார் அறக்கட்டளை தவிர தாங்கள் நடத்தும் மற்றொரு கல்வி அறக்கட்டளையான அகரம் பவுண்டேஷன் பணிகளை விவரித்தார்.

    சிவகுமார் அறக்கட்டளை மூலம் கல்வி உதவிபெற்ற ஜெகவீரபாண்டியன் எனும் மாணவர் ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 53-வது ரேங்கில் தேர்ச்சி பெற்றுள்ளதையும் குறிப்பிட்டார்.

    முன்னதாக நிகழ்ச்சியில் சிவகுமார் மகள் பிருந்தா கடவுள் வாழ்த்துப் பாடினார். இளையமகனும் நடிகருமான கார்த்தி வரவேற்றுப் பேசினார்.

    பரிசு பெற்ற மாணவர்கள் நன்றி தெரிவித்துப் பேசினர். நிகழ்ச்சி பற்றியும், அறக்கட்டளை செயல்கள் குறித்தும் மேலும் விவரங்களுக்கு சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தியின் மீடியா மேனேஜர் நிகில் முருகன் (9840077270), ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X