'அப்போது எங்கே போனார்கள் இந்த நடிகர்கள்?'

இதுகுறித்து வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவையின் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒரு நடிகை சில நடிகைகளின் கற்பு குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக ஒட்டு மொத்த தமிழ் நடிகர்களும் கலந்து கொண்டு கண்டன கூட்டம் நடத்தியுள்ளனர். செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே வேளையில் வெளி மாநிலத்தில் பிறந்து தமிழ்நாட்டிற்கு நடிப்பதற்காக வந்த நடிகை குஷ்பு 'தமிழ் நாட்டில் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக் கொள்ளாத பெண்கள் எத்தனை பேர் உள்ளார்கள்' என்று கால்மேல் கால்போட்டு சவால் விட்டார். அதனை ஒரு பத்திரிகை செய்தியாகவும் வெளியிட்டது.
அப்போது இந்த நடிகர்கள், நடிகைகள் எங்கே போனார்கள். தமிழ் உணர்வு, தமிழர் என்று சொல்லிக் கொள்ளும் எந்த நடிகராவது அப்போது அதைக் கண்டிக்க முன்வந்தார்களா? போராட்டம் நடத்தினார்களா? நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்களா? அல்லது செய்தி வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் கைது செய்யப்பட்டாரா? நடிகை குஷ்பு கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போது தமிழ் பெண்கள் மட்டுமே வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள்.
பல அவதூறு வழக்குகள் தாக்கல் செய்தார்கள். நடிகை குஷ்பு மீது வழக்கு தொடர்ந்தது சரிதான் என்று உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. தற்போது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
நடிகைகளின் கற்பை விட தமிழ் பெண்களின் கற்பு எந்த விதத்தில் குறைந்து போய்விட்டது. நடிகர்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள் என்பதற்காக ஒரு 'செய்தி ஆசிரியர்' கைது செய்யப்பட்டார்.
காவல்துறை ஏன் இதில் இத்தனை அக்கறை காட்டுகிறது... பத்திரிக்கைகள் உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிடக்கூடாது என்ற கருத்துக்கு எதிரானவர்கள் அல்லர் நாங்கள்.
தமிழ் பெண்களின் கற்பை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் அப்போது கைது செய்யப்படவில்லையே?
முகச் சாயம் பூசிய நடிகைகளின் கற்பை விட தமிழ்ச்சிகளின் கற்பு எந்தவிதத்தில் குறைந்து போய்விட்டது என நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், சத்தியராஜ் போன்ற முன்னணி நடிகர்களை கேட்க விரும்புகிறோம்.
தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட ஒரு தமிழனுக்கு இல்லையே என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











