உன்னைப்போல் ஒருவனுக்கு யுஏ!

இந்தியில் வெளியான எ வெட்னஸ்டே படத்தை உன்னைப்போல் ஒருவன் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் கமல்ஹாஸன். அவருடன் முதல்முறையாக இணைந்து நடிக்கிறார் மோகன்லால்.
கமல் மகள் ஸ்ருதி ஹாஸன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் நேற்று முன்தினம் சென்ஸார் செய்யப்பட்டது. படம் பார்த்த தணிக்கைக் குழுவினர் இந்தப் படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கினர்.
உன்னைப் போல் ஒருவன் உலகம் முழுக்க வரும் 18ம் தேதி வெளியாகிறது.
தடைகோரி சாய்மிரா வழக்கு:
இதற்கிடையே 'உன்னைப் போல் ஒருவனை' படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கோரி பிரமிட் சாய்மிரா சார்பில் நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை வரும் 16ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
நாராயணன் தனது மனுவில்,
பிரமிட் சாய்மீரா நிறுவனம் கமலுடன் சேர்ந்து மர்ம யோகி படத்தை ரூ.100 கோடியில் தயாரிக்க முடிவு செய்தது. இதற்காக ராஜ்கமல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அமிதாப்பச்சன் உள்ளிட்ட இந்தி நடிகர்களை வைத்து இந்தியில் இப்படத்தை எடுக்கவும் திட்டமிடப்பட்டது.
இதற்காக கமலிடம் ரூ. 10 கோடியே 90 லட்சம் முன் பணம் கொடுத்து இருந்தோம்.
ஆனால் அப்படத்துக்கான எந்த வேலையையும் அவர் துவங்கவில்லை. இந்த நிலையில் கமல் 'உன்னைப் போல் ஒருவன்' என்ற படத்தை எடுத்து அதை ரிலீஸ் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளார். எங்களிடம் முன் பணம் வாங்கித்தான் இந்த படத்தை அவர் எடுத்துள்ளார். எனவே படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பபட்டுள்ளது.
நீதிபதி ராஜசூர்யா முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. பிரமிட் சாய்மீரா நிறுவனம் சார்பில் வக்கீல் சிதம்பரம் ஆஜராகி வருகிற 18ம் தேதி 'உன்னைப் போல் ஒருவன்' படத்தை ரிலீஸ் செய்ய டிக்கெட் விநியோகம் போன்ற வேலைகளை ஆரம்பித்து விட்டனர். படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
ஆனால் தடைவிதிக்க மறுத்த நீதிபதி, கமல் தரப்பில் விளக்கம் கேட்க வசதியாக வரும் 16ம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளி வைப்பதாக அறிவித்தார். அதுவரை படத்துக்கு தடையேதும் இல்லை என்றும் இதே நிலை தொடரும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தனது நிலை குறித்து சில தினங்களுக்கு முன் கமல் அறிக்கை வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











