தசாவதாரம்: ஜாக்கி வருகை உறுதி!

கமல்ஹாசன் 10 வேடங்களில் கலக்கியுள்ள தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தொடர்பாக குழப்பமான நிலை காணப்பட்டு வந்தது. ஜாக்கிசான் வருவது மட்டும் உறுதியாக தெரிந்தது. ஆனால் விழா எப்போது நடைபெறும் என்பதில் பல குழப்பங்கள் நிலவின.
இந்த நிலையில் ஆடியோ வெளியீட்டு விழா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 25ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா நடைபெறவுள்ளது. ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிடுகிறார்.
விழாவுக்கு ஒரு நாள் முன்பாகவே ஹாங்காங்கிலிருந்து தனி விமானம் மூலம் ஜாக்கி சான் சென்னைக்கு வருகிறார். சான் 2 நாட்களுக்கு சென்னையில் தங்கியுள்ளார். அடையார் பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் அவர் தங்கவுள்ளார். அவருக்குப் பாதுகாப்பாக அவருடைய பாதுகாவலர்களும் உடன் வருகிறார்கள்.
ஜாக்கி சானின் 2 நாள் விஜயத்துக்காக மிகப் பெரும் தொகையை தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் செலவிடவுள்ளாராம். ஜாக்கி சான் தங்கும் ஹோட்டலில் கடைசி மூன்று தளங்களையும் 3 நாட்களுக்கு புக் செய்துள்ளனராம்.
ஜாக்கி சானுக்காக செலவிடப்படும் தொகை உத்தேசமாக ரூ. 5.5. கோடி என்று கூறப்படுகிறது. படத்தின் ஆடியோ உரிமையே ரூ. 2.65 கோடிக்குதான் விற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான செலவுக்காக ஆடியோ உரிமையை வாங்கியுள்ள சோனி பிஎம்ஜி ரூ.1 கோடி தருகிறதாம்.
அமிதாப் பச்சன் பட விழாவில் பங்கேற்பதை ஏற்கனவே உறுதி செய்துள்ளார். ரஜினிகாந்த் குசேலன் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். எனவே அவர் வருவாா, மாட்டார என்பது தெரியவில்லை. இந்தி, தமிழ், தெலுங்குத, மலையாளம் ஆகிய திரையுலகங்களைச் சேர்ந்த பலரும் விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
சிறப்பு விருந்தினராக முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார். தனது வருகையை அவர் ஏற்கனவே உறுதி செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











