பெனாசிர் படத்துக்கு குடும்பம் எதிர்ப்பு

மும்பையைச் சேர்ந்த ஒருநிறுவனம் பெனாசிர் பூட்டோவிழ் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கவுள்ளது. பெனாசிர் வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பார் எனத் தெரிகிறது.
இப்படத்துக்கான அனுமதியைப் பெற பெனாசிர்குடும்பத்துடனும், பாகிஸ்தான் அரசுடனும் தொடர்பு கொண்டிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஆனால் இந்த படத்திற்கு தாங்கள் ஒத்துழைப்பு தரப் போவதில்லை எனறு பெனாசிர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெனாசிரின் கணவரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவருமான ஆசிப் அலி சர்தாரியின் வக்கீல் பர்கத்துல்லா பாபர் துபாயில் கூறுகையில், இப்படத்திற்கு பெனாசிர் குடும்பம் எந்த வகையிலும் ஒத்துழைப்பு தராது. அதேசமயம் திரைப்படமாக்கம் என்பது கருத்துச் சுதந்திரமாகும். எனவே படம் தயாரிக்கப்படுவதை நாங்கள் தடுக்க முயற்சிக்க மாட்டோம்.
பெனாசிர் உயிருடன் இருந்தபோது தன்னைப் பற்றிய ஒரு டாக்குமென்டரி தயாரிப்புக்கு ஒப்புக் கொண்டிருந்தார். அதற்குத்தான் நாங்கள் ஒத்துழைப்போம். அந்த தயாரிப்புப் பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
இந்திய நிறுவனம் தவிர அமெரிக்க நிறுவனம் உள்பட மேலும் இரு சர்வதேச நிறுவனங்கள் பெனாசிரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க முன்வந்துள்ளன. அவற்றையும் நாங்கள் நிராகரித்து விட்டோம் என்றார் பாபர்.
ஏற்கனவே பெனாசிர் கொல்லப்பட்டவுடன், இந்தியத் தயாரிப்பாளர் மகேஷ் பட், பெனாசிர் குறித்து படம் எடுக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் பெனாசிர் குடும்பத்திலிருந்து ஆட்சேபனை வந்ததால் அந்த
முடிவை கைவிடுவதாக அறிவித்தார் பட் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











