ஷங்கர் முகாமில் கார்த்திக் ராஜா

ஷங்கர் படங்களில் இதுவரை ராஜா குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இசையமைத்ததில்லை. இந்த நிலையில் முதல் முறையாக கார்த்திக் ராஜா, ஷங்கர் முகாமில் நுழைகிறார். புதுமுகம் தாமிராவின் இயக்கத்தில் உருவாகவுள்ள ரெட்டைச் சுழி படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.
இந்தப் புதிய கூட்டணியை ஆர்.டி.பர்மன், நசீர் ஹுசைனுடன் ஒப்பிடலாம். மாபெரும் இசை மேதையான ஆர்.டி.பர்மன், நீண்ட காலமாகவே புகழ் பெற்ற இயக்குநர் நசீர் ஹூசைனுடன் இணையாமல் இருந்தார்.
எஸ்.டி.பர்மனின் மகனாக இருந்தபோதிலும், அவருக்கு இயக்குநர்கள் வாய்ப்பளிக்காமல் தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான நசீர் உசேன், ஆர்.டி.பர்மனை அழைத்து தனது தீஸ்ரி மன்ஜில் படத்திற்கு இசையமைக்க வைத்தார்.
உசேனுடன் இணைந்த பிறகுதான் ஆர்.டி.பர்மனின் திறமை உலகுக்குத் தெரிய வந்தது. அதன் பிறகு நான்ஸ்டாப் ஆக பர்மனின் இசை சாம்ராஜ்யம் தொடர்ந்தது.
உசேனும், பர்மனும் இணைந்து கொடுத்த படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆகின. சாகர் வரை இந்த வெற்றி ஊர்வலம் தொடர்ந்தது.
இசைஞானி இளையராஜா, தமிழ் திரையுலகின் இசை ராஜாவாக கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறார். அவருடைய இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா தனி முத்திரையுடன் கலக்கிக் கொண்டிருக்கிறார். கார்த்திக் ராஜா மட்டுமே இன்னும் சரியான வாய்ப்பு அமையாமல், தனது திறமையை நிரூபிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.
அவரது உல்லாசம், மெல்லிய தென்றலாக ரசிகர்களின் மனங்களை வருடியது. ஆனால் போட்டி மிகுந்த திரையுலகில் ஆணித்தரமான முத்திரையைப் பதிக்க அது தவறி விட்டது. இடையில் கார்த்திக் ராஜா எங்கே இருக்கிறார் என்று கேட்கும் அளவுக்கு படங்கள் எதையும் செய்யாமல் இருந்து வந்தார் கார்த்திக் ராஜா.
இந்த நிலையில்தான் ஷங்கரின் வட்டாரத்திற்குள் நுழைந்துள்ளார் கார்த்திக் ராஜா. உசேனால் ஆர்.டி.பர்மனுக்கு பிரேக் கிடைத்தது போல, கார்த்திக் ராஜாவுக்கு, ஷங்கரால் பிரேக் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ரெட்டைச் சுழி, கார்த்திக் ராஜாவுக்கு பெரிய பிள்ளையார் சுழியைப் போடட்டும்!


Click it and Unblock the Notifications











