twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஈழப் படுகொலைகள்: இப்படியே விடக் கூடாது - பிரகாஷ் ராஜ்

    |

    Nakkeran Gopal, Prakash Raj, AR Murugadoss at Ezham Mounathin vazhi Book Launch
    மானை வேட்டையாடினார் தண்டிக்க சட்டம் இருக்கிறது. ஆனால் அப்பாவிக் குழந்தைகளைக் கொல்வதை அப்படியே விட்டு விட முடியாது என்று ஈழத்தில் நடந்த, நடந்து வரும் இனப் படுகொலைகள் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.

    ஈழம்- மெளனத்தின் வலி என்ற பெயரில் ஈழ நிலைமை குறித்த ஒரு நூல் வெளியிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாலா, அமீர், லிங்குசாமி, மிஸ்கின், ஏ.ஆர்.முருகாதாஸ், கே.வி.ஆனந்த், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட இயக்குநர்கள், அப்துல் ரகுமான், இன்குலாப், பா.விஜய், தாமரை, தமிழச்சி தங்கப்பாண்டியன், கபிலன், நா.முத்துக்குமார், அறிவுமதி, மு.மேத்தா உள்ளிட்ட கவிஞர்கள் என பலரும் தங்களது ஈழ உணர்வுகளை இதில் பதிவு செய்துள்ளனர்.

    நேற்று இந்த நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நக்கீரன் ஆசிரியர் கோபால், பிரகாஷ் ராஜ், சிவக்குமார், ஏ.ஆர்.முருகதாஸ், மிஸ்கின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பிரகாஷ் ராஜ் பேசுகையில் ஒரு மானை வேட்டையாடினால் தண்டிக்க சட்டம் இருக்கிறது. போராட அமைப்பும் இருக்கிறது. ஆனால் மனிதர்களை வேட்டையாடி கொல்கிறார்களே, இதை தடுக்க சட்டம் இல்லையா?

    பெரியவர்களை கொல்ல காரணம் பல சொல்லலாம்.

    ஆனால் குழந்தைகளை கொல்ல காரணம் சொல்ல முடியுமா? இதை இப்படியே விட்டு விட முடியாது என்றார் வேதனையுடன்.

    இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இன்னும் சற்று கோபமாக பேசினார். அவர் கூறுகையில், கற்பனைக்கும் எட்டாத சிந்திக்க முடியாத ஒரு கொடூரம் என்பதை கேள்விபட்டிருந்தாலும் கூட, இந்த புத்தகதில் உள்ள புகைப்படங்களைப் பார்க்கும்போது, ஒரு காட்டுமிராண்டி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் எழுகிறது.

    ஏன் என்றால் இதில் நிறைய விஷயங்கள் நமக்கு தெரியவே இல்லை. நம்ம அறிவுக்கு இதுவெல்லாம் வரவே இல்லை என்று நினைக்கும்போது யாரோட தப்பு. ஏன் இவ்வளவு தகவல் தொழில் நுட்பத்தில் பயங்கரமாக பின்தங்கியிருக்கிறோம். வானத்தை எட்டி விட்டோம் என்று சொல்கிறோம். அனால் இதுவெல்லாம் நமக்கு தெரியவே இல்லை என்று சொல்லும் போது வெட்கமாக இருக்கிறது.

    வட இந்தியாவில் போய் இதையெல்லாம் சொன்னால் 'யா, தி ஸ்ரீலங்கா பிராப்ளம்' என சாதாரணமாக கேட்பார்கள். குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டால், நிதி திரட்டுவதில் தமிழன் தான் முதல் இடத்தில் இருக்கணும். கார்கில் வார் நடந்தது என்றால் நிதி திரட்ட தமிழன்தான் முதல் இடத்தில் நிற்கணும். ஆனால் ஒரு இனம் அழிவது உங்க அறிவுக்கே வராதா?

    உங்களுக்கு அப்படி ஒன்று நடப்பதே தெரியாதா? யார் தப்பு இது. அரசியல் ஈகோவா? மதமா? இல்ல பழிவாங்கலா? எனக்கு தெரியல.

    செயற்கைக்கோளில் இருந்து பார்க்கும்போது மரத்தில் உட்காந்திருப்பது குருவியா, காக்காவா என பார்க்கக்கூடிய அறிவியல், முகாம்களில் எத்தனை பேர் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது பதியவே இல்லையா? தமிழனை பார்த்தவுடனேயே அந்த கேமரா திரும்பிடுச்சா?

    போர் குற்றம் நடக்கிறது என்று ஐ.நா. சோதனை செய்ய வரும்போது, ஒரே நாளில் கிட்டதட்ட 50 ஆயிரம் தமிழர்கள் புல்டோசரால் நசுக்கப்பட்டிருக்கிறார்கள்.

    எல்லாமே ஊனமுற்றவர்கள், வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள். ஏன் என்றால் அவர்கள் அடையாளத்தை மறைக்கிறார்கள். பேசினால்தான் தமிழன். தமிழ் பேசும்போது தமிழனாகிறான். தமிழ் பேசும்போது கொலை செய்கிறார்கள்.

    ஆனால் பேசாத குழந்தை. குழந்தைக்கு இன்னும் மொழியே தெரியாது. அந்த குழந்தை என்ன பாவம் செய்தது. அப்பாவி குழந்தைகளை கொலை செய்திருக்கிறார்கள்.

    பணத்துக்காக கொலை செய்யும் கூலிப்படை கூட ஒரு கொள்கை வைத்திருக்கிறார்கள். அதாவது குழந்தைகள், பெண்களை கொலை செய்ய மாட்டோம் என்று. கூலிப்படைக்கு இருக்கிற ஒரு கட்டுப்பாடு கூட ஒரு ராணுவத்துக்கு கிடையாது.

    அணுகுண்டுக்கும், புத்தகத்துக்கும் ஒரே வித்தியாசம்தான். அணுகுண்டு வீசும்போதெல்லாம் வெடிக்கும், புத்தகம் படிக்கும் போதெல்லாம் வெடிக்கும். இந்தப் புத்தகம் அந்த மாதிரியான புத்தகமாக இருக்க வேண்டும்.

    அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் நடந்த போரை தடுத்து நிறுத்தியது ஒரே ஒரு புகைப்படம் தான். ஒரு சிறுமி நிர்வாணமாக நடந்து வருவதுபோல் உள்ள புகைப்படம்தான். இங்கு அதைவிட கொடூரமான புகைப்படங்கள் இருக்கின்றன. இந்தப் புகைப்படத்திற்கு இந்த உலகம் என்ன பதில் சொல்லப்போகிறது.

    அப்பாவித் தமிழர்கள் எல்லாம் சாகும்போது, போர்க்குற்றம் என்றால், அதைப் பார்த்து வாய் மூடி, கண் மூடி இருப்பது வரலாற்றுக் குற்றம்.

    தரையில் முட்டி அழ வேண்டும் போல் இருக்கிறது. தமிழர்களின் ஒற்றுமையின்மையால் தான் நாம் அழிந்து கொண்டு வருகிறோம். இனியாவது நாம் ஒற்றுமையாக இருந்து இந்த கொடுமைகளை தடுக்க வேண்டும் என்றார் கோபத்துடன்.

    பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால், சத்குரு ஜக்கிவாசுதேவ் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது உணர்வுகளை பதிவு செய்தனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X