twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'முதலை'யிடம் சிக்கியதில்லை - சுஹாசினி

    By Staff
    |

    Suhasini
    நான் நடிக்க வந்த புதிதில், திரையுலகில் நிறைய முதலைகள் இருக்கின்றன, பார்த்து பத்திரமா இரு என்று சொன்னார்கள். ஆனால் அப்படி யாரிடமும் நான் சிக்கியதில்லை. என் அனுபவத்தில் அப்படி யாரையும் நான் பார்த்ததில்லை என்றார் நடிகை சுஹாசினி்.

    பிரபல ஒளிப்பதிவாளர் கே.ராஜ்ப்ரீத் முதல்முறையாக தயாரித்துள்ள அலையோடு விளையாடு என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிலிம்சேம்பர் தியேட்டரில் நடந்தது. பாடல்களை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட, இயக்குநர் ஆர். பார்த்திபன் பெற்றுக்கொண்டார்.

    பின்னர் இயக்குநர் பாக்யராஜ் பேசுகையில், ராஜ்ப்ரீத் வெகுளியான, நல்ல மனுசன். என்னோட டார்லிங் டார்லிங் டார்லிங் ஷூட்டிங்கின் போது, பனை மரத்தில் ஆட்கள் ஏறுவது போல ஒரு காட்சி எடுத்தோம். ஆட்கள் ஏறின பிறகுதான் தெரிஞ்சது, எல்லாமே மொட்டை மரங்கள்னு. உடனே ஏறுவதை நிறுத்தச் சொல்லிட்டேன். உடனே ராஜ்ப்ரீத் சொன்னாரு, சார் வேணும்னா இப்படி எடுத்திடலாம்... மேல ஒண்ணும் இல்லாததால எல்லாரும் கீழே இறங்கிட்டாங்கன்னு எடுத்திடுவோமேன்னாரு, என்றார் சிரித்தபடி.

    குருவை மிஞ்சிய சிஷ்யரான பார்த்திபன் இப்படிச் சொன்னார்:

    'தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத, அவ்வளவு சுலபத்தில் ஒதுக்க முடியாத பெயர் ராஜ்ப்ரீத். நல்ல மனிதர் என்பதற்கு இவர் ஒரு அளவுகோல். எத்தனையோ பேருக்கு வாழ்க்கை கொடுத்த மனிதர். புதிய பாதை பைனான்ஸ் பிரச்சனையால் நின்றுவிட்டது.

    அப்போதெல்லாம் ராஜ்பரீத்தின் ஸ்கூட்டரில் ஏறிக் கொண்டு ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கியது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கு. நாங்க ரெண்டுபேரும் அடிச்ச காமெடி இதுவரை எந்த சினிமாவிலும் வாராதது.

    எந்த ஜோக் அடிச்சாலும் உடனே சிரிச்சுடுவாரு, மறுநாள் வந்து அந்த ஜோக் என்னன்னு விளக்கமா கேட்பாரு!', என்றார்.

    நடிகை சுஹாசினி:

    26 வருடங்களுக்கு முன்பு நான் சினிமாவுக்கு வந்தபோது, 'சினிமா உலகில் நிறைய முதலைகள் இருக்கின்றன' என்று என்னை பயமுறுத்தினார்கள். ஆனால் என் அனுபவத்தில் அப்படி எல்லாம் இல்லை. எந்த முதலையும் என்னை பயமுறுத்தவில்லை. நானும் அப்படி ஒரு அனுபவத்தில் சிக்கவில்லை. சாதாரணமானவர்களை விட, சினிமா உலகில் எல்லோரும் நல்லவர்கள்.

    சினிமாவில், நான் கெட்டவர்களை சந்திக்கவே இல்லை. என் முதல் படத்திலேயே நல்ல குடும்பத்தை சேர்ந்த ஒளிப்பதிவாளர் ராஜ்ப்ரீத், ஸ்டில்ஸ் ரவி போன்றவர்கள் அறிமுகமானார்கள். நான் இன்னும் வெற்றிகரமாக இயங்குவதற்கு இவர்களைப் போன்றவர்கள்தான் காரணம்.

    சினிமாவில் மட்டுமே இன, மொழி வேறுபாடு கிடையாது. இதற்கு உதாரணம், ராஜ்ப்ரீத். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அவர், தமிழ்நாட்டில் அனைவருக்கும் உறவினர் போல் ஆகி விட்டார் என்றார்.

    விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், செயலாளர் சிவசக்தி பாண்டியன், சுசீந்திரன், படத்தின் கதாநாயகன் விஜயன், கதாநாயகி கார்த்திகா, இசையமைப்பாளர்கள் சபேஷ்-முரளி, டைரக்டர் ராகவன், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், கவிஞர் சினேகன் ஆகியோரும் பேசினார்கள்.

    பத்திரிகையாளர் அமலன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X