விஜய் - அசின் நடித்த காவலன் திட்டமிட்டபடி வருமா?
விஜய் - அசின் நடித்த காவலன் திரைப்படத்தை வரும் டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்தப் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழினப் படுகொலையை அரங்கேற்றிய ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக இலங்கையில் அசின் கிட்டத்தட்ட கொள்கைப் பிரச்சாரம் நடத்தாத குறையாக செயல்பட்டார்.
இதனால் அவருக்கு தடை விதித்த தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு முடிவு செய்தது. ஆனால் திடீரென்று சரத்குமார் அசினுக்கு ஆதரவு தெரிவிக்க, சூழ்நிலையே மாறிப்போனது.
அதுவரை அசினுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சினிமா அமைப்புகள், அவர் மன்னிப்புக் கேட்டால் போதும் என்று கூறத் தொடங்கின.
அதே நேரம் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் அசின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து, அவர் நடித்த படங்களைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. அதேபோல, ராஜபக்சேக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவின் படத்துக்கும் செருப்பு மாலை அணிவித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சூழலில் விஜய்யின் காவலன் படம் வெளியாகிறது.
இந்தப் படத்தை நிச்சயம் வெளியாக விடமாட்டோம் என தமிழ் அமைப்புகள் கூறியுள்ளன. இந்தப் படத்தின் நாயகி அசின் மீது தமிழ் சினிமா அமைப்புகள் என்ன நடவடிக்கை எடுத்தன என்பதை தெரிவித்தாக வேண்டும் என்றும், அப்படி நடவடிக்கை எடுக்க முடியாத பட்சத்தில் இனி இலங்கை தமிழர் விவகாரத்தில் சரத்குமார் சினிமாக்காரர்கள் தலையிடுவதற்கு அருகதையற்றவர்களாகவே கருதப்படுவார்கள் என்றும் கூறியுள்ளனர்.
இதனால் காவலன் படம் வெளிவருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











