twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாகேஷுக்கு கலையுலகம் புகழஞ்சலி

    By Staff
    |

    Nagesh
    மறைந்த நகைச்சுவைத் திலகம் நாகேஷுக்கு திரையுலக, நாடக உலகக் கலைஞர்கள் புகழஞ்சலி செலுத்தினர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு தினங்களும் வெவ்வேறு அமைப்புகளால் இந்த புகழஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது.

    நாகேஷின் ரசிகர்கள் மற்றும் அவருடன் திரைத்துறையில் பணிபுரிந்த கலைஞர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் கூட்டம் சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஒய்.ஜி.பி. அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் துக்ளக் சோ, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நாகேஷின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி பேசினர்.

    சோ பேசுகையில், "கலைஞர்கள் தங்களுக்கு இணையான திறமையுள்ள சக கலைஞர்களால் பாரட்டப்படுவதில்லை. அந்த விஷயம் நாகேஷ் மாதிரியான சிறந்த கலைஞர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு. வசனத்தை மிகத் துல்லியமாகப் பேசும் அதே வேளையில் நடிப்புடன் ஒன்றி பாத்திரமாகவே மாறி நடித்தவர் நாகேஷ். அவரை நினைக்கும் போது அவருடைய பாத்திரங்கள்தான் நினைவுக்கு வருகின்றன. மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் மட்டும்தான்" என்றார்.

    ஒய்.ஜி.மகேந்திரன்: "நாகேஷை நினைத்தாலே திருவிளையாடல் தருமி, தில்லானா மோகனாம்பாள் வைத்தி, எதிர்நீச்சல் மாடிப்படி மாது போன்ற கதாபாத்திரங்கள்தான் சட்டென்று ஞாபகத்துக்கு வரும். இதை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியாக பார்க்கவில்லை" என்றார்.

    நாகேஷுக்கு புகழஞ்சலி செலுத்தும் மற்றொரு நிகழ்ச்சி, நாடக அகடமி மற்றும் ப்ரியா விஷன் சார்பில் சென்னை மயிலாப்பூரில் நேற்று நடத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், ஏவிஎம் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    ஆர்.எம்.வீரப்பன் பேசியதாவது:

    "உழைப்பால் உயர்ந்தவர் நாகேஷ். திரைப்படங்களில் சின்னச் சின்ன காட்சிகளைக் கூட அவரது நடிப்பால் பேச வைத்துவிடுவார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன், தெய்வத்தாய் படத்தில் நடிக்க வைத்தபோது அவருக்கும் எனக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. பிறகு பாண்டிபஜாரில் அவர் சினிமா தியேட்டர் கட்டும்போது, கட்டடம் சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டது. உதவி கேட்டபோது அந்தத்துறை அமைச்சராக இருந்ததால், அவருக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது. நாகேஷ் மறையவில்லை. நம்மோடு வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார் என்றார்.

    தயாரிப்பாளர் ஏ.வி.எம்., சரவணன் பேசும்போது, "எங்கள் படத்தில் நடிக்க வைக்க ஒரு காமெடி நடிகர் வேண்டும் என்று சொன்னபோது டைபிஸ்ட் கோபு மூலம் நாகேஷ் எங்கள் நிறுவனத்துக்கு அழைத்து வரப்பட்டார், வீரத்திருமகன் படத்தில் நடிப்பதற்காக. அதில் நடிக்க அவர் 6,000 ரூபாய் சம்பளம் கேட்டார். நாங்கள் 3,000 ரூபாய் தான் கொடுத்தோம். அப்போது அவர், "அடுத்த படத்தில் நான் கேட்கும் சம்பளத்தைக் கொடுப்பீர்கள், பாருங்கள்" என்று சொன்னார்.

    தனது நடிப்பால் அதிரடியாக உயர்ந்தார். "சர்வர் சுந்தரம்" படத்தில் நடிக்க 35,000 ரூபாய் சம்பளம் கொடுத்தோம், அவர் கேட்காமலேயே!" என்றார்.

    நடிகர் எஸ்.வி.சேகர்: "ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் அவருடன் 85 வாரங்கள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. 'நாகேஷைக் கேளுங்கள்' என்று அந்த நிகழ்ச்சிக்குப் பெயர். கேள்விகள் குவிந்துவிட்டன. அவர் அளித்த பதில்கள், அவரது திரைப்பட நகைச்சுவைக்கு இணையாக ஜொலித்தன.

    அவர் மறைந்துவிட்டார் என்று யார் சொன்னது? சினிமா இருக்கும் வரை நாகேஷ் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார் என்றார்.

    இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன், "நடிப்பில் சாதனை படைத்த நாகேஷுக்கு மத்திய அரசு விருது கொடுத்து மரியாதை செய்யவில்லை. வாழும் காலத்திலேயே மேதைகளைக் கெளரவிக்க வேண்டும்," என்றார்.

    நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி, நடிகை சச்சு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X