twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஆஸ்கர்' ரவி இனி 'ஆர்டினரி'

    By Staff
    |

    Oscar Films (P) Ltd
    பிரபல தமிழக திரைப்படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் எந்த முன் அனுமதியும் பெறாமல் தங்கள் நிறுவன முத்திரை மற்றும் பெயரை பயன்படுத்தி வருவதாக அமெரிக்காவில் உள்ள ஆஸ்கர் அகாடமி குற்றம் சாட்டியுள்ளது.

    தங்களது டிரேட் மார்க்கை தவறாக பயன்படுத்திவருவதால் ஆஸ்கர் ரவிச்சந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துளளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

    திரைப்படத்துறையில் உலக அளவில் சிறந்த படங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான பெருமைக்குரிய ஆஸ்கர் விருதுகளை அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆஸ்கர் அகாடமி என்ற நிறுவனம் வழங்கிவருவது தெரிந்த விஷயம்தான். ஆனால் அந்த நிறுவனத்தின் டிரேட் மார்க் சின்னத்தை அனுமதியில்லாமல் ரவிச்சந்திரன் பயன்படுத்தி வந்தததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு புதுக்கதை.

    இந்த விஷயத்தை தங்கள் நிறுவனம் கடுமையாக கருதுவதாக கூறிய ஆஸ்கர் அகாடமி இயக்குநர்களின் ஒருவரான ஸ்காட் மில்லர், இதுதொடர்பாக ரவிச்சந்திரன் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    ரூ.60 கோடி மெகா பட்ஜெட்டில் கமல் 10 வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் படத்தின் டிரெய்லர் காட்சிகள் ஏற்கெனவே ஆஸ்கர் ரவிச்சந்திரனை நீதிமன்றம் வரை கொண்டு சென்றது. அடுத்து, ரூ.10 கோடி செலவில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானை வரவழைத்து சென்னையில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட அந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் ஆபாசமாக ஆடை அணிந்து வந்ததாக நடிகை மல்லிகா ஷெராவத் மீது கண்டன கணைகள். ஏதோ நல்லகாலம் நடிகர் ரஜினி தலையிட்டு அந்த விவகாரத்தை சுமுகமாக முடித்து வைத்தார். இப்போது அவரது நிறுவனத்தின் பெயரிலேயே புதிய பிரச்னை.

    ஆஸ்கர் நிறுவன பேனரில் இதுவரை 20 படங்களை ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். தற்போது கைவசம் 4 படங்கள் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்கர் நிறுவன பெயரையும், ஆஸ்கர் அகாடமி சின்னம் போலவே அச்சாக தனது நிறுவனத்துக்கும் ரவிச்சந்திரன் பயன்படுத்தி வருகிறார். இதுதான் இப்போது சர்ச்சையைக் கிளப்பியது.

    இந்த சர்ச்சை புண்ணியத்தை நடிகர் ஜாக்கிசான் தான் வாங்கிக் கட்டிக் கொள்ளவேண்டும் போல. ஏனென்றால் ஆர்வமிகுதியால் ஜாக்கிசானை வரவழைத்ததால்தான் தசாவதாரம் படத்தின் மீது சர்வதேச பார்வை பதிந்தது. இதையடுத்துதான் உண்மையான ஆஸ்கர் அகாடமியும் விழித்துக் கொண்டு ரவிச்சந்திரனை பார்த்து உறுமுகிறது.

    சர்வதேச அளவில் ஆஸ்கர் அகாடமி தனது சின்னத்தை காப்பிரைட் செய்திருப்பதால் அனுமதியின்றி அதைப் பயன்படுத்துவது சட்டவிரோதமாகும்.

    இந்நிலையில் மலிவான படத் தயாரிப்புகளுக்கு தங்கள் நிறுவன பெயரை சூட்டியிருக்கும் ரவிச்சந்திரன் மீது மிகப்பெரிய இழப்பீடு தொகை கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் ஸ்காட் மில்லர் பயமுறுத்துகிறார்.

    திரைப்பட விநியோகஸ்தராக இருந்து இந்தளவுக்கு முன்னேறியுள்ள ஆஸ்கர் ரவிச்சந்திரன் விஜய்யின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டான காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம்தான் தயாரிப்பாளர் அந்தஸ்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர் மீது எழுந்துள்ள இந்த பரபரப்பு குற்றச்சாட்டு நமது நிருபர் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது தொடர்பாக ஆஸ்கர் அகாடமியிடமிருந்து தனக்கு எந்த நோட்டீஸோ, தகவல்களோ அளிக்கப்படவில்லை. அப்படி பிரச்னை கிளம்பினால் அதன் விளைவுகளை உரிய முறையில் எதிர்கொள்ளத் தயார் என்று ரவிச்சந்திரன் கூறினார்.

    அதுவரைக்கும் அவர் ஆஸ்கரா, ஆர்டினரியா?

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X